நான் அவதூறாக பேசவில்லை.. 60 ஆண்டுகளாக போராடுகிறேன்- ஹெச்.ராஜா 

ஹச்.ராஜாவிற்கு சிறப்பு நீதிமன்றம் தலா ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ள நிலையில் தான் பேசியதை அவதூறு என அவர்கள் நினைத்துக் கொண்டால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளார்.

Dec 2, 2024 - 15:40
 0
நான் அவதூறாக பேசவில்லை.. 60 ஆண்டுகளாக போராடுகிறேன்- ஹெச்.ராஜா 
ஹெச்.ராஜாவிற்கு தலா 6 மாத காலம் சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா, பெரியார் சிலையை உடைப்பேன் என்று சமூகவலைதளத்தில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும்  பல்வேறு காவல் நிலையங்களில் தி.மு.க, காங்கிரஸ் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக ஈரோடு நகர காவல்துறை, மற்றும் கருங்கல்பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஹெச். ராஜா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த  சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணையையும் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி - எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன் விசாரணைக்கு வந்தது.

இதில், பெரியார் சிலையை உடைப்பேன் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும்  எம்.பி. கனிமொழி மீதான கருத்து,  அரசியல் ரீதியான கருத்து என்றும் ஹெச்.ராஜா தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இரு பதிவுகளும் ஹெச்.ராஜாவின் சமூக வலைதளப்பக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது என்பதை  இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது. எனவே ராஜா குற்றவாளி என்று குறிப்பிட்டு தலா 6 மாத காலம் சிறை தண்டனை  மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து ஹெச்.ராஜா அளித்துள்ள பேட்டியில், இந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் வரும் 31-ஆம் தேதி வரை மேல் முடிவு செய்ய காலம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேல்முறையீடு செய்ய உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், அரசியல் சித்தாந்த ரீதியான முறையில் சண்டை எப்போதும் தொடரும். எனது மனநிலையில் மாற்றமில்லை, அதனால் எது குறித்தும் எனக்கு கவலையும் இல்லை. 60 ஆண்டு காலமாக போராடிக் கொண்டிருப்பவன் நான். அனைத்தையும் எதிர்கொள்வேன். சட்டத்தை மதித்து எனது வழக்கை நடத்தி வருகிறேன். நான் பேசியதை அவதூறு என அவர்கள் நினைத்துக் கொண்டால் என்னால் ஒன்று செல்லும் இயலாது என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow