இனி மாதம் ரூ.2500.. புதுச்சேரி பெண்களுக்கு குட் நியூஸ் சொன்ன ரங்கசாமி!
21 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, இனி 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப் பேரவைக் கூட்டம் நேற்று முன்தினம் (மார்ச் 10) தொடங்கியது. நேற்று (மார்ச் 11) நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 12) புதுச்சேரி அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை சட்டப் பேரவையில் முதலமைச்சர் என்.ரங்கசாமி தாக்கல் செய்தார்.
13 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் 2025-26-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி உரையாற்றினார். அதில், புதுச்சேரி அரசுக்கு ஆதரவு அளித்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்த பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பட்ஜெட் சிறப்பம்சங்கள்:
- விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 2000 ரூபாய் வழங்கப்படும்.
- 21 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, இனி 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
- கணவரால் கைவிடப்பட்டோர், விதவைகள் உதவித்தொகைகள் 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
- ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசியுடன், இரண்டு கிலோ இலவச கோதுமை வழங்கப்படும்.
- அரசு மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.
- பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் வாரம் 3 நாள் வழங்கப்படும் முட்டை, இனி வாரத்தில் அனைத்து நாட்களும் வழங்கப்படும்.
- 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று இளநிலை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
- மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகு 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும். மீனவ சமுதாய ஈமச்சடங்கு தொகை 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்வு.
- புதுச்சேரி ஈசிஆர் பகுதியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்படும்.
- புதுச்சேரி மத்திய சிறைச்சாலை முழுமையாக கணினி மயமாக்கப்படும்.
- எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடியில் இருந்து 3 கோடி ரூபாயாக உயத்தப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
சுமார் 1 மணி நேரம் 10 நிமிடம் பட்ஜெட்டை முதலமைச்சர் தாக்கல் செய்து முடித்த நிலையில் சபையை நாளை காலை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்து ஒத்திவைத்தார்.
What's Your Reaction?






