Chennai Red Alert: சென்னைக்கு இன்றே ரெட் அலர்ட்..! இயல்பை விட 81% கூடுதலாக மழை... மக்களே உஷார்!

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் இயல்பை விட 81% அதிகம் மழை பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Oct 15, 2024 - 19:18
 0
Chennai Red Alert: சென்னைக்கு இன்றே ரெட் அலர்ட்..! இயல்பை விட 81% கூடுதலாக மழை... மக்களே உஷார்!
சென்னைக்கு இன்றே ரெட் அலர்ட்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னையில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்றிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், அங்கு மாநகராட்சி ஊழியர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய அறிவிப்பின் போது சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில், நேற்றிரவு முதல் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். சென்னை அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை தொடரும் என்றும், சில பகுதிகளில் அதி கன மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதனிடையே, சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், ஐந்து சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதன்படி, பெரம்பூர் ரயில்வே சுரங்கப் பாதை, கணேசபுரம் சுரங்கப் பாதை, சுந்தரம் பாய்ண்ட சுரங்கப் பாதை, துரைசாமி சுரங்கப் பாதை, மேட்லி சுரங்கப் பாதை ஆகிய ஐந்து சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், மழைநீர் தேங்கியுள்ளதால் தானா தெரு, வெலிங்டன் சாலை முதல் டேம்ஸ் ரோடு வரை உள்ளிட்ட 20 சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. அதேநேரம், அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒரேநாளில் பெய்த கனமழையால், இயல்பை விட 81% கூடுதலாக மழைப் பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் இன்று அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம். மேலும், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் மழை கால மீட்புப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தேநீர் அருந்தினார். மேலும், “கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் - நேரம் காலம் பார்க்காமல் நம் துயர் துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள்! அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow