மதுபான விற்பனைக்கு ரசீது கட்டாயம் .. டாஸ்மாக் நிர்வாகம் அறிவுத்தல்..!
மதுபான கடைகளில் விற்பனையின் போது நுகர்வோருக்கு ரசீதுகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனையின் போது நுகர்வோர் விரும்பி கேட்கும் மதுபானங்களுக்கு அதற்கு உண்டான ரசீதுகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தவறான செயல்பாடுகளை கண்காணிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் மற்றும் உதவி மேலாளர் முழு பொறுப்பாவதோடு துறை ரீதியான உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டங்களில் இயங்கி வரும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் முழுமையாக செயல்படுத்திட ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும், டாஸ்மாக் மேலாண் இயக்குனர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், குறுஞ்செய்தி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும், கையடக்க கருவி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும் இடையே அதிக அளவில் விற்பனை வித்தியாசங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்க்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனையின் போது நுகர்வோர் கேட்கும் மதுபானங்களுடன் அதற்குண்டான ரசீதுகள் நுகர்வோர்க்கு கண்டிப்பாக வழங்கப்படவேண்டும். மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நுகர்வோர்க்கு மதுபானங்களை விற்பனை செய்யப்படும் பொழுது மட்டுமே ஸ்கேன் செய்து விற்கப்பட வேண்டும். மதுபான சில்லறை விற்பனை கடைகளில் இருப்பிலுள்ள மதுபானங்களை முன் கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டு நுகர்வோர்க்கு விற்பனை செய்தல் கூடாது.
மதுபான சில்லறை விற்பனை கடைகளிலிருந்து குறுஞ்செய்தி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும், கையடக்க கருவி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும் இடையே ஏற்படும் வேறுபாடு மிகையான விற்பனை தொகையாக இருப்பினும் அதனை கடைப்பணியாளர்கள் விற்பனை செய்யப்படும் போது சரிவர ஸ்கேன் செய்யாமல் விற்பனை செய்ததாகவே கருதப்படும். ஆக மிகையான தொகையென கண்டறியப்படும் தொகையின் மீது 50% அபராதத் தொகை, அபராதத் தொகை மீதான வட்டி @ 24% ஆண்டுக்கு மற்றும் ஜிஎஸ்டி@ 18% வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?






