தஞ்சாவூர் மாவட்டம், தெலுங்கன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவர் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரானார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் 2001 - 2006 வரை தொழில் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தார்.
2011 - 2016இல் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். பிறகு 2016 - 2021, ஜூன் வரை, ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகித்தார். தற்போதும், ஒரத்தாடு தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக உள்ளார்.
வைத்திலிங்கம், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை பெருங்களத்துாரில், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்டு இன்ப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம், 57.94 ஏக்கரில், 1,453 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும், ஐ.டி., நிறுவனங்கள் கட்டவும் தீர்மானித்தது. இதற்கான அரசு அனுமதி பெறுவதற்காக, வைத்திலிங்கத்துக்கு 27.90 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தல், முறைகேடான பண பரிவர்த்தனை போன்ற புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையினர் காலை சுமார் 7:30 மணிக்கு வைத்திலிங்கத்திற்கு சொந்தமான தெலுங்கன்குடிகாட்டில் உள்ள அவரது வீட்டில் 5 கார்களில், 15பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அமலாக்கத்துறையினர் துப்பாக்கி ஏந்திய 6 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் 15 மணி நேரத்திற்கும் மேல் சோதனை நடத்தினர். இரவு 10 மணிவரை நடைபெற்ற சோதனை முடித்துக் கொண்ட அமலாக்கத்துறையினர் பின்ன வெளியே வந்தனர்.
இந்நிலையில், மது போதையில் நீண்ட நேரமாக காத்திருந்த வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள், சோதனை முடிந்து வெளியில் வந்த அமலாக்கத்துறை அலுவலர்கள் மீது மோதியும், தள்ளிக்கொண்டும் வைத்திலிங்கத்தை பார்க்க சென்றனர்.
சோதனை குறித்து பேட்டியளித்த வைத்திலிங்கம், ‘அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன் என்றும் எந்த ஆவணங்களையும் எடுத்துச் செல்லவில்லை’ என்றார். பேட்டி எடுத்துவிட்டு திரும்பிய பத்திரிக்கையாளர்களை மது போதையில் போதையில் இருந்த வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் திடீரென தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.