புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கு கைதி சிறையில் உயிரிழப்பு!
சிறுமியை சிதைத்த கொடூரர்கள் விவேகானந்தன், கருணாஸ் ஆகியோர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டையை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதாவது தனது வீட்டின் வெளியே இருந்து மாயமான சிறுமி சுமார் 72 மணி நேரத்திற்குப் பிறகு வாய்க்காலில் துணியால் சுற்றப்பட்டு கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டியும், சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டியும் புதுச்சேரி முழுவதும் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற தவறிய புதுவை முதல்வர் ரங்கசாமி பதவி விலக வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினார்கள். விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் (59) மற்றும் கருணாஸ் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து இந்த விவகாரம் புதுச்சேரியில் பற்றி எரிந்த நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி சிறுமியின் பெற்றோருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கினார். மேலும் சிறுமியின் பெற்றோரை நேரில் வரவழைத்து, சிறுமியை சிதைத்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.
இதற்கிடையே சிறுமியை சிதைத்த கொடூரர்கள் விவேகானந்தன், கருணாஸ் ஆகியோர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருமே காலாப்பட்டு மத்திய சிறையில் பலமுறை தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டனர். இதனால் இவர்களை கண்காணிப்பதற்காகவே தனியாக காவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
ஆனாலும் விவேகானந்தன் சோப்பை சாப்பிடுவது, சட்டையால் கழுத்தை இறுக்கிக் கொள்வது என தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை சிறை காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், இன்று காலை சிறையில் உள்ள கழிப்பறையில் தனது துண்டால் தூக்கிட்டு விவேகானந்தன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறை அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறிய துண்டு மூலம் விவேகானந்தன் எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும்? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. அவரது உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?