'பார்க்கிங்' பட பாணியில் சம்பவம்.. காரை நிறுத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே அடிதடி.. 6 பேர் கைது!
பெரு நகரங்களில் சாதாரணமாக நடக்கும் பார்க்கிங் பிரச்சனைகளுக்கு பின்னால் இவ்வளவு விஷயம் உள்ளது என்பதை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மிகத் தெளிவாக காட்டியிருப்பார். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் தற்போது நடந்துள்ளது.
லக்னோ: ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் 'பார்க்கிங்'. சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வழக்கமாக நடக்கும் பார்க்கிங் பிரச்சனைதான் இந்த படத்தின் மைய கரு.
அதாவது எம்.எஸ்.பாஸ்கர், ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் ஒரே குடியிருப்பில் கீழ் தளம், மேல் தளத்தில் குடியிருப்பார்கள். கீழ்தளத்தில் ஹரிஷ் கல்யாண் காரை நிறுத்தி இருக்க, எம்.எஸ்.பாஸ்கர் அதில் பைக்கை பார்க் செய்யும்போது இருவருக்கும் இடையே சிறு சிறு பிரச்சனை உருவாகும். அதன்பின்பு ஹரிஷ் கல்யாணுக்கு போட்டியாக எம்.எஸ்.பாஸ்கர் கார் வாங்க அந்த கார்களை 'பார்க்கிங்' செய்வது தொடர்பாக இருவருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்து, அது ஈகோ பிரச்சனையாக உருவெடுத்து இருவரின் வாழ்க்கையையும் எந்த அளவு புரட்டிப் போட்டது என்பதுதான் 'பார்க்கிங்' படத்தின் கதை.
பெரு நகரங்களில் சாதாரணமாக நடக்கும் பார்க்கிங் பிரச்சனைகளுக்கு பின்னால் இவ்வளவு விஷயம் உள்ளது என்பதை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மிகத் தெளிவாக காட்டியிருப்பார். இந்நிலையில், 'பார்க்கிங்' பட பாணியில் கார்களை பார்க்கிங் செய்வது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பெரும் மோதல் ஏற்பட்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் செக்டார் 72 பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 'பி' பிளாக்கில் கார்களை பார்க்கிங் செய்வது தொடர்பாக இரு குடும்பத்தினர் இடையே அவ்வப்போது சிறு சிறு பிரச்சனை ஏற்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை பெரும் மோதலாக மாறியது. கார்களை நிறுத்துவது தொடர்பாக இரு தரப்பினரும் கடும் வார்தை மோதலில் ஈடுபட்ட நிலையில், ஒரு கட்டத்தில் இது அடிதடியில் போய் முடிந்தது.
ஒரு பிரிவினர் பார்க்கிங் செய்திருந்த கார்களின் கண்ணாடி,கதவுகளை மற்றொரு பிரிவினர் பேட், ஸ்டெம்புகள் உள்ளிட்டவற்றால் அடித்து நொறுக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது 2 பெண்கள் உள்பட ஒரு பிரிவினர் கார்களை அடித்து நொறுக்குவதும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் அவர்களை தாக்க முயற்சிக்கும் வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அந்த இடமே போர்க்களமானது. இந்த சம்பவம் குறித்து செக்டார் 113 காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இரு குடும்பத்தையும் சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பார்க்கிங் பிரச்சனை பெரும் மோதலாக மாறியது உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?