Minister Nitin Gadkari Announce Satellite Toll System : தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் அல்லது அந்த நெடுஞ்சாலைகளை அமைக்க செலவு செய்யப்பட்ட முதலீட்டை திரும்ப எடுக்கும் வரை முழுமையான சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், அதன் பிறகு பராமரிப்புக்கு செலவான குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது பொதுவான விதி.
தமிழ்நாட்டில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில், கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அந்த காலக்கெடுவை தாண்டி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும், சுங்கக் கட்டணம் வசூல் தொடர்கிறது. இதனால், சுங்கச்சாவடி கட்டணம் என்பது பொதுமக்களின் மேல் ஏற்றும் சுமை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
உதாரணமாக, “தாம்பரம் - திண்டிவனம் இடையில் நான்கு வழி சாலை அமைக்க 1999 ஆம் ஆண்டு தொடங்கி, 2004ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. 2005 ஏப்ரல் முதல் தேதி முதல் இந்த சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை அமைக்க ஆன செலவு 536 கோடி. ஆனால், கடந்த 16 ஆண்டுகளில் சுங்கக் கட்டணம் வசூலித்தது 1,500 கோடிக்கும் அதிகம்” என்று அன்புமணி ராமதாஸ் கூட தெரிவித்து இருந்தார்.
ஏற்கனவே வாகன உரிமையாளர்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது இருக்கும் சுங்கச்சாவடிகள், கூடுதல் சுமை என்பதுதான் அப்பட்டமான உண்மை. இந்தியாவில் அதிக அளவு சுங்கச்சாவடிகள் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்கவேண்டும். ஆனால், 48 சுங்கச்சாவடிகள் தற்போது இருக்கின்றன.
இதனிடையே, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சி கலந்துகொண்டு பேசியிருந்த, பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி [Nitin Gadkari], “நாடு முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக, செயற்கைக்கோள் வாயிலாக [Satellite System] பூமியில் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிய பயன்படும், ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப அடிப்படையில் சுங்கக் கட்டண முறையை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அடுத்த ஆறு மாதங்களில், இந்த நடைமுறையை அமல்படுத்த உள்ளோம். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் பயணித்த சரியான துாரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் இந்த நடைமுறை உதவும்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இன்னும் 2 மாதத்தில் சேட்டிலைட் முறையில் டோல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில், டோல்கேட் தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
தற்போது கர்நாடகாவில் உள்ள பெங்களூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை எண் 275 மற்றும் ஹரியானாவில் உள்ள பானிபட் - ஹிசார் தேசிய நெடுஞ்சாலை எண் 709 ஆகியவற்றில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தி பார்க்கப்பட்டுள்ளது. இன்னும், 2 மாதத்தில் நாடு முழுவதும் செயற்கைகோள் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் முறை கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.