நடிகை பாலியல் புகார்.. சீமான் வாக்குமூலத்தை ஒப்பிட்டு பார்க்கும் பணி தீவிரம்
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்துள்ள வாக்குமூலத்தை ஒப்பிட்டு பார்க்கும் பணியில் வளசரவாக்கம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இரண்டாவது முறை சம்மன் அளிக்கப்பட்டது. அப்போது சீமான் வீட்டில் காவலாளி மற்றும் உதவியாளர் தாக்குதல் நடத்திய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது . கண்டிப்பாக இரண்டாவது சம்மனுக்கு ஆஜராக வேண்டும் இல்லை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் நேற்று (பிப்.28) இரவு சுமார் 10 மணியளவில் சீமான் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் விசாரணை நடைபெற்றது. முன்னதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட போதெல்லாம் தொண்டர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் காரணமாக வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு மூன்று அடுக்கில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
அதையும் மீறி சீமான் விசாரணைக்கு வந்த போது நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் போலீசாரிடம் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக தடுப்புகளை தாண்டி சீமான் மற்றும் வழக்கறிஞர்கள், விசாரணைக்கு காவல் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். சீமானிடம் 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை போலீசார் கேட்டதாக கூறப்படுகிறது.
உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் நேரடியாக விசாரணை நடத்தியதாகவும் சீமான் அளித்த பதிலை உதவி ஆய்வாளர் ஒருவர் டைப் செய்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.நடிகையுடன் பழக்கம், அவருடன் திருமணம் நடந்ததா? பணபரிவர்த்தனை செய்யப்பட்டதா? கருகலைப்பு குறித்தும் பல்வேறு கேள்விகளை சீமானிடம் கேட்டு அதனை பதிலாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சீமான் கடந்த 2023-ஆம் ஆண்டு அளித்த வாக்குமூலத்தையும் தற்போது அளித்துள்ள வாக்குமூலத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் பணியில் வளசரவாக்கம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். நடிகை அளித்த வாக்குமூலத்தையும், சீமான் அளித்த வாக்குமூலத்தையும் போலீசார் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர். தேவைப்பட்டால் விசாரணைக்கு மீண்டும் அழைப்போம் எனவும் இல்லையென்றால் நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்பிப்போம் எனவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?






