அண்ணா பல்கலைக்கழகம் வழக்கு.. நியாயமான விசாரணை பாதிக்கும்.. காவல்துறை அறிக்கை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பரவி வரும் ஆதாரமற்ற செய்திகள் நியாயமான விசாரணையை பாதிக்கக்கூடும் என காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாமக, பாஜக போன்ற கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று (ஜன 3) மதுரையில் பாஜக மகளிர் அணியினர் தீச்சட்டி ஏந்தியும், மிளகாய் வற்றல்களை இடித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக தலைவர் தமிழிசை செளந்தர ராஜன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்புமணி ராமதாஸ் மனைவி செளமியா அன்புமணி உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இக்குழுவினர் மாணவியிடம் நடத்திய விசாரணையின் போது சார் ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதாகவும், அவருடன் இருக்குமாறு கூறியதாகவும் மாணவி மீண்டும் உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியானது. இந்த செய்தி சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் திமுக அரசு குற்றவாளியை பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக பல கட்சி தலைவர்களும் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், ஞானசேகரன் ஒரு சாரிடம் பேசியதாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக பரவி வரும் செய்தி ஆதாரமற்றது என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், " சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சென்னை அண்ணா நகர் துணை ஆணையாளர் மருத்துவர் புக்யா சினேஹா தலைமையில் அனைத்து மகளிர் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது.
இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு, இவ்வழக்குகளில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் / முன்னேற்றங்கள் எனக் கூறி சில கருத்துக்களை பொதுவெளியில் ஒளிபரப்பி/பிரசுரித்து வருகின்றன. குறிப்பாக, “ எதிரி ஒரு சாரிடம் பேசியதாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாகவும்”, சிறப்புப் புலனாய்வுக் குழுவானது, பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்களை எதிரியிடமிருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும்”, “திருப்பூரை சேர்ந்த ஒரு நபரும் இதில் எதிரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்” என்பன உள்ளிட்ட ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
எனினும், இவ்வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எந்த ஒரு அறிக்கையோ, கருத்தோ எந்த ஒரு தனிநபருக்கோ அல்லது ஊடகத்திற்கோ தெரிவிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இவ்வழக்குகள் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவையாகும்.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை பற்றிய இத்தகையை ஆதாரமற்ற மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான தகவல்கள், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், இவ்வழக்குகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையையும் பாதிக்கக் கூடும். இவ்வழக்குகளின் தீவிரதன்மை மற்றும் விசாரணையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஊடகங்கள், தனி நபர்கள், சமூக ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இவ்வழக்கு விசாரணை தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறான தவறான தகவல்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துதுடன், புலன்விசாரணையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக் கூடும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
What's Your Reaction?