72-வது பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின்.. தலைவர்கள் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இன்று காலை தனது வீட்டில் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர், தனது பிறந்தநாளையொட்டி, பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
அண்ணா - கலைஞர் வழியில் அயராது உழைத்து ஆதிக்கத்தை வீழ்த்தி இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என முழக்கமிட்ட்டார். இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். தொடர்ந்து, அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல கட்சி தலைவர்களும் சமூக வலைதளத்தின் மூலம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளதாவது, “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று, தமிழக மக்களுக்கு சேவையாற்றிட இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “தாங்கள் இன்று தங்களுடைய 72-வது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன். மேலும், எல்லா வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் தங்களை வாழ்த்துகிறேன்.”
பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மும்மொழியில் வாழ்த்துகிறேன் என்று கூறி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மு.க.ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






