விபத்தில் காலை இழந்தாலும் வெறித்தனம்.. தளபதியை காண 190 கி.மீ. சைக்கிள் பயணம்..

விபத்தில் இடது காலை இழந்த மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர், தமிழக வெற்றி கழக மாநாட்டில் கலந்து கொள்ள 190 கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளார்.

Oct 26, 2024 - 21:09
Oct 26, 2024 - 22:26
 0
விபத்தில் காலை இழந்தாலும் வெறித்தனம்.. தளபதியை காண 190 கி.மீ. சைக்கிள் பயணம்..
தமிழக வெற்றி கழக மாநாட்டில் கலந்து கொள்ள 190 கி.மீ பயணம் செய்யும் மாற்றுத்திறனாளி

தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, தனது புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார் விஜய். இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியினை அறிமுகம் செய்து வைத்தார். இதில், தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட முக்கியமான நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை நடைபெறுகிறது. தவெக மாநாட்டில், 5 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொண்டர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் தவெக மாநாட்டில் கலந்துகொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசப் போகிறார் என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், விபத்தில் இடது காலை இழந்த மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழக மாநாட்டில் கலந்து கொள்ள தஞ்சையில் இருந்து சைக்கிளில் புறப்பட்டார்.

தஞ்சை பிள்ளையாய்ப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. தீவிர விஜய் ரசிகரான இவர் சாலை விபத்தில் சிக்கி தனது இடது காலை இழந்தார். மாற்றுத்திறனாளியான இவர், அச்சகம் ஒன்றில் வேலை பார்த்து தனது, இரண்டு மகன்களையும் படிக்க வைத்து வருகிறார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, மாற்றுத்திறனாளியான ராஜா தஞ்சையில் உள்ள சாய்பாபா கோவிலில் வழிபாடு செய்து விட்டு சைக்கிளில் புறப்பட்டார்.

190 கி.மீ பயணம் செய்து நாளை பிற்பகல் மாநாட்டு திடலை அடைய ராஜா திட்டமிட்டு உள்ளார். தஞ்சையில் இருந்து புறப்பட்ட அவரை, விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். தனது தலைவனை காண வெறித்தனமாக புறப்பட்ட ரசிகரின் செயல் அப்பகுதியினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து கூறியுள்ள மாற்றுத்திறனாளி ராஜா, ‘13 வயதில் ஒரு விபத்தில் காலை இழந்தேன். நான் தீவிர விஜய் ரசிகர், எந்த ஒரு கட்சியிலும் மாற்றுத் திறனாளி அணி என ஒரு பிரிவு இல்லை. விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் மாற்றுத்திறனாளி அணி உருவாக்கி, பொறுப்புகள் வழங்கி மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்க வேண்டும். எனவே, தலைவர் விஜய்யின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒற்றைக்காலில் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்கிறேன்’ என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow