'மகா விஷ்ணுவை கைது செய்ய வேண்டும்'.. மாற்றுத்திறனாளிகள் அதிரடி புகார்!

உங்கள் பெயர் என்ன? பள்ளிகளில் மதம் குறித்து பேசக்கூடாது என்று யார் சொன்னது? என்று மகா விஷ்ணு மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் மிக கடுமையாக நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. மகாவிஷ்ணு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Sep 6, 2024 - 20:18
Sep 7, 2024 - 10:07
 0
'மகா விஷ்ணுவை கைது செய்ய வேண்டும்'.. மாற்றுத்திறனாளிகள் அதிரடி புகார்!
Maha Vishnu

சென்னை: மகா விஷ்ணு என்ற நபர் சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு நடத்தியுள்ளார். மேலும் பாவம், புண்ணியம், மறுஜென்மம் போன்ற மூடநம்பிக்கை தொடர்பான கருத்தை அவர் மாணவர்களிடம் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர், மாணவர்களிடம் இதுபோன்ற கருத்துக்களை கூறக்கூடாது என்று அவரிடம் கூறியுள்ளார்.

ஆனால் மகாவிஷ்ணு, உங்கள் பெயர் என்ன? பள்ளிகளில் மதம் குறித்து பேசக்கூடாது என்று யார் சொன்னது? என்று மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் மிக கடுமையாக நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. மகாவிஷ்ணு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. 

''அரசு பள்ளிகள் அனைவருக்கும் பொதுவான இடமாக இருக்க வேண்டும்; எந்த ஒரு மதத்தையும், எந்த ஒரு அமைப்பையும் இழிவுபடுத்தும் வகையில் இருக்கக் கூடாது. அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு நடத்திய நபர் மீதும், இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

 ''எனது பள்ளிக்கு வந்து எனது ஆசிரியரை அவமானப்படுத்திய அந்த நபரை நான் சும்மா விட மாட்டேன். இனிமேல் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் மற்றும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி ஆகியோர் பணியிடை மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், ''தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சிறுபான்மையினர் நலப் பள்ளிகள் ஆகியவற்றில் ஆன்மீகம் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது'' என்று தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவிட்டது. இதற்கிடையே சர்ச்சையில் சிக்கிய மகாவிஷ்ணு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், மாற்றுத்திறனாளி ஆசிரியரை இழிவுபடுத்திய மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் தோ.வில்சன் என்பவர் கொடுத்த புகார் மனுவில், ''அரசு பள்ளிகளில் அறிவியலுக்கு மாறாக மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவாற்றி இருக்கிறார். இதை தட்டிக்கேட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியரை இழிவுபடுத்தும் வகையிலும், அவரின் மனம் புண்படும்படியும் மகா விஷ்ணு பேசியுள்ளார். அவரது பேச்சை மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்செயலாக நாங்கள் கருதுகிறோம். ஆகவே மகா விஷ்ணு மீது மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டப்படியும், 2016 ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்படியும் கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow