சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறையின் புதிய கட்டுப்பாடுகள்...!
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னையை நோக்கி மீண்டும் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறை பல புதிய திட்டங்களை விதித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பயணிகள் சென்னை திரும்புவதால், 18.1.2025 மற்றும் 19.1 2025 தேதிகளில் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு அதிக போக்குவரத்து எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு சிரமமின்றி பஸ்கள் இயங்க கீழ்க்காணும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்.
கனரக வாகனங்கள் திருப்பி விடுதல்:
சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு X காஞ்சிபுரம் பரணூர் சந்திப்பில் திருப்பி, சர்வீஸ் சாலையைப் பயன்படுத்தி ஸ்ரீபெரும்புதூர் வழியாக பயணிக்க வேண்டும்.
சென்னை நோக்கி வரும் வாகனங்கள் எஸ்பி கோயில் X ஒரகடம் சந்திப்பில் திருப்பி, ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்ல வேண்டும்.
திருப்போரூர் வழியாக வரும் கனரக வாகனங்கள் டாக்டர் அம்பேத்கர் சிலையில் திருப்பி, செங்கல்பட்டு வழியாக பயணிக்க வேண்டும்.
ஜிஎஸ்டி ரோடு, வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை, ஓஎம்ஆர், மற்றும் ஈசிஆர் சாலைகளில் கனரக வாகனங்களுக்கு ஜனவரி 18 மதியம் 2 மணி முதல் ஜனவரி 20 மதியம் 2 மணி வரை அனுமதி வழங்கப்படமாட்டாது.
சிறப்பு ரயில்கள்:
தெற்கு ரயில்வே, பயணிகள் தங்கள் பயணத்தை விரைவாக முடிக்க செங்கல்பட்டு, மறைமலை நகர், பொத்தேரி, மற்றும் காட்டாங்குளத்தூர் ரெயில் நிலையங்களில் இருந்து 15 நிமிட இடைவெளியில் சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.
பல்லாவரம் புதிய பாலத்தில் ஒருவழி போக்குவரத்து:
தேவையான சமயங்களில், ஜனவரி 18 மதியம் 2 மணி முதல் ஜனவரி 20 மதியம் 12 மணி வரை, பல்லாவரம் புதிய பாலத்தில் சென்னை நோக்கி ஒருவழி போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படும்.
வெளி வட்ட சாலை (ORR) வழியாக திருப்பி விடுதல்:
ஜிஎஸ்டி ரோட்டில் போக்குவரத்தை விரைவுபடுத்த, ஓம்னி பஸ்கள் வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் நோக்கி திருப்பப்படும். மேலும், முடிச்சூர் சாலை சந்திப்பில், மற்ற வாகனங்களையும் தேவையானபோது வெளிவட்ட சாலை தாம்பரம் நோக்கி திருப்ப வாய்ப்புள்ளது, இதன் மூலம் ஜீரோ பாயின்ட் பகுதியில் போக்குவரத்து எளிதாக்கப்படும்.
சென்னையில், பாதுகாப்பாக சிரமமின்றி பயணம் செய்வதை உறுதிசெய்ய பொது மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
What's Your Reaction?