பொது இடங்களில் குப்பை போடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை .. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு..!
காணும் பொங்கல் தினத்தில் பொது இடங்களில் கூடும் மக்கள் குப்பை போடுவதை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
காணும் பொங்கல் தினத்தில் மெரினாவில் திரண்ட மக்களால் கடற்கரை குப்பை கூளமான விவகாரம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்தியகோபால் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத்தரப்பிலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரப்பிலும், கலாச்சார பண்டிகைகளின் போது குப்பை போடுவது என்பது நாடு முழுவதும் உள்ள பிரச்னை எனவும், மக்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
மாநிலத்தில் பெரும்பாலான ஊர்களில் காணும் பொங்கல் தினத்தில் கூடிய மக்களால் ஏற்படும் குப்பைகள் அடுத்த நாளோ, அதற்கு மறுநாளோ முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறது எனவும் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, காணும் பொங்கலுக்கு திரளும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் போலீசாரை நியமிக்கப்பட்டு, அறிவிப்புகள் அறிவிக்கப்படுவதைப் போல், குப்பை போட்டால் அபராதம் விதிக்கப்படும் என ஏன் அறிவிப்புகள் அறிவிக்க கூடாது எனக் கேள்வி எழுப்பிய தீர்ப்பாயம், விநாயகர் சதுர்த்தியைப் போல காணும் பொங்கல் பண்டிகைக்கும் விதிமுறைக்ளை வகுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
மேலும், காணும் பொங்கல் பண்டிகைக்கு ஒன்று கூடுவது தான் கலாச்சாரமே தவிர குப்பை போடுவது கலாச்சாரம் அல்ல எனத் தெரிவித்த தீர்ப்பாயம், இந்த விஷயத்தில் தமிழக அரசு முன் மாதிரியாக செயல்பட வேண்டும் எனக் கூறி, வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
What's Your Reaction?