நீட் தேர்வு..திமுகவின் அரசியல் நாடகத்தை நம்ப மாட்டார்கள்.. கொந்தளிக்கும் எடப்பாடி

38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்? என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Jun 29, 2024 - 00:02
Jul 1, 2024 - 23:37
 0
நீட் தேர்வு..திமுகவின் அரசியல் நாடகத்தை நம்ப மாட்டார்கள்.. கொந்தளிக்கும் எடப்பாடி
NEET exam introduced by DMK-Congress alliance in 2010 SaysEdappadi Palaniswamy

சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின்,நீட் விலக்கு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தனி தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தமிழ்நாட்டின் குரல், இந்தியாவின் குரலாக எதிரொலித்து வருகிறது என்று மத்திய அரசு கோரிய கேள்விகள் அனைத்துக்கும் விளக்கங்கள் அளித்துள்ளது.நீட் தேர்வு வந்த பிறகு கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக ஆகிவிட்டது. நீட் தேர்வை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். 

நீட் தேர்வு தொடர்பான தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரல் தற்போது நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. போட்டித் தேர்வுகளால் நமது மாணவர்கள் நிலை குலைந்துள்ளனர். நீட் தேர்வு கால தாமதமாக தொடங்கியதை காரணம் காட்டி விதிகளுக்கு முரணாக கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.
மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். 

தமிழ்நாட்டின் நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணைய சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக வலியுறுத்துகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நீட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், பிறப்பித்துள்ள உத்தரவுகள், நீட் தேர்வு குறித்த முறைகேடுகள் தொடர் அம்பலம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பது, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கம், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு என தொடர்ச்சியான நிகழ்வுகள் சொல்கின்ற செய்தி ஒன்று தான்- நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று!

38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்? இத்தீர்மானம் இந்த விடியா திமுக அரசின் மற்றுமொரு அரசியல் நாடகம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை மடைமாற்ற நினைக்கும் இதுபோன்ற பயனற்ற அரசியல் வித்தைகளை மக்கள் இனியும் நம்புவதாக இல்லை.

நீட் தேர்வை பாராளுமன்றம் மூலம் மறுபரிசீலனை செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை வருகின்ற பாராளுமன்றக் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய பாஜக கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன்.

திமுக-காங்கிரஸ் கூட்டணியால் கடந்த 2010ல் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் என அனைத்துத் தளங்களிலும் தொடர்ச்சியான முன்னெடுப்புகளை மேற்கொண்ட ஒரே இயக்கம் என்ற அடிப்படையில், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வு ஒழியும் வரை அதிமுகவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow