நீட் தேர்வு மோசடிகள்.. லோக்சபாவை முடக்கிய இந்தியா கூட்டணி எம்பிக்கள்.. ராகுல் மைக் துண்டிப்பு
டெல்லி: லோக்சபாவில் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் சபை நடவடிக்கைகள் ஜூலை 1ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டன.நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என லோக்சபா, ராஜ்யசபாவில் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தினர். லோக்சபாவில் நீட் தேர்வு மோசடி குறித்து விவாதிக்க வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நேற்று உரையாற்றினார். இதனையடுத்து லோக்சபா இன்று காலை கூடியதும் மறைந்த முன்னாள் எம்பிக்கள் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நீட் தேர்வு மோசடிகள் தொடர்பாக லோக்சபா, ராஜ்யசபாவை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் என திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது. லோக்சபாவில் திமுக எம்பி கனிமொழி, ராஜ்யசபாவில் திருச்சி சிவா ஆகியோர் நீட் தேர்வு மோசடிகள் குறித்து சபைகளை ஒத்திவைத்து விவாதிக்க கோரி நோட்டீஸ் கொடுத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுந்து, அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டாக இந்த நாட்டின் மாணவர்களுக்கு ஒரு செய்தியை சொல்ல வேண்டும். இதனை முக்கியமான பிரச்சனையாக நாங்கள் கருதுகிறோம். மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வு மோசடிகள் குறித்து இன்று சபையில் தனியே விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்போது ராகுல் காந்தியின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எதிர்கட்சித்தலைவரின் மைக் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் லோக்சபாவில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவை அமளி துமளியானதை அடுத்து லோக்சபா நடவடிக்கைகளை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
பின்னர் பகல் 12 மணிக்கு சபை கூடிய போதும் நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். ராகுல் காந்தி பேசும் போது மைக் துண்டிக்கப்பட்டதையும் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து லோக்சபா சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வரும் ஜூலை 1ஆம் தேதி லோக்சபா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வட இந்திய மாநிலங்களில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை செய்து வரும் கும்பலைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு மோசடியில் மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நீட் தேர்வு எழுதுவதில் இருந்து மாணவர்கள் பலரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு போல நெட் உள்ளிட்ட தேசியத் தேர்வு முகமை நடத்துகிற தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?