10 ரன்களுக்கு ஆல்-அவுட்.. டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனையை படைத்த நாடு..
டி20 கிரிக்கெட் வரலாற்றில் மங்கோலியா அணி 10 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, குறைவான ரன்களை பதிவுசெய்தது.
2026ஆம் ஆண்டு ஆடவர் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளது. இதில், கலந்துகொள்ளும் ஆசிய அணிகளுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள், ‘ஏ’, ‘பி’ என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ’ஏ’ பிரிவில் நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில், மங்கோலியா அணி, சிங்கப்பூர் அணியும் விளையாடின. இதில், டாஸ் வென்ற சிங்கப்பூர் அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து, களமிறங்கிய மங்கோலியா அணியினர், ஏதோ, பிட்சை வந்து பார்த்துவிட்டு செல்லுபவர்கள் போல, களத்துக்கு வருவதும், போவதுமாக அணிவகுப்பு நடத்திக் கொண்டிருந்தனர்.
இதனால், அந்த அணி 10 விக்கெட்டுகளுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் 2 ரன்களே அதிகப்பட்சமாகும். 5 பேர் டக்-அவுட் ஆகினர். 4 பேர் 1 ரன்களில் அவுட்டானார்கள். இரண்டு பேர் 2 ரன்கள் எடுத்தனர்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைவான ரன்கள் எடுத்த நாடுகள் பட்டியலில், ஐல் ஆஃப் மேன் [Isle of Man] அணியுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. முன்னதாக, 2023ஆம் ஆண்டு, ஸ்பெயின் அணியுடனான போட்டியில், ஐல் ஆஃப் மேன் [Isle of Man] அணி 10 ரன்கள் எடுத்திருந்தது.
அதற்கடுத்த மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திலும், இதே மங்கோலிய அணியே உள்ளது. சிங்கப்பூர் அணி தரப்பில் ஹர்ஷா பரத்வாஜ் 4 ஓவர்கள் வீசி 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது ஆடவர் டி20 போட்டிகளில் இரண்டாவது சிறந்த பந்துவீச்சாகும்.
இதற்கு முன்னதாக, மலேசிய வீரர் சயஸ்ருல் இத்ருஸ், சீனா அணிக்கு எதிராக 8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். தொடர்ந்து 11 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிங்கப்பூர் அணி 5 பந்துகளிலேயே 13 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம், தகுதிச்சுற்று தொடரில் மங்கோலியா அணி கடைசி இடத்தை பிடித்துள்ளது.
What's Your Reaction?