சட்டப்பேரவையை அவமதித்ததற்கு ஆளுநர்  மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாடு சட்டப்பேரவையை அவமதித்ததற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Jan 6, 2025 - 13:02
 0
சட்டப்பேரவையை அவமதித்ததற்கு ஆளுநர்  மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்
சிவசங்கர்-ஆர்.என்.ரவி

2025-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜன 6) காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அந்த வகையில் பேரவை மண்டபத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். தொடர்ந்து, சட்டப்பேரவை தொடங்கியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முழுமையாக வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி யாரும் எதிர்பாராத விதமாக பேரவையை விட்டு திடீரென வெளியேறினார். அதாவது, பேரவை தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். மேலும், ஆளுநர் வெளிநடப்பு செய்தது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அதில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும்  பாடப்படுகிறது.  இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. 

ஆளுநர் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான முதலமைச்சரிடமும், சட்டப்பேரவை சபாநாயகரிடமும்  உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.

அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு  உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவையை அவமதித்ததற்கு ஆளுநர்  மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசின் சாதனைகளை படிக்க தயங்கிக் கொண்டு உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றுள்ளார். தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாடு சட்டப்பேரவையும் தேசிய கீதத்தை எப்பொழுதும் அவமதித்தது கிடையாது.  

இந்த தவறான வாதத்தை வைத்து ஒரு நாடகத்தை நடத்த முன் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி வருத்தம் தெரிவிக்க வேண்டும். ஆளுநர், தமிழ்நாட்டு மக்களால் தொடர்ந்து புறம் தள்ளப்பட்டு வருகிறார். அவையை அவமரியாதை செய்த ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆளுநர் ரவியே வெளியேறு என்ற நிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி உருவாக்கி வருகிறார் என்று பேசினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow