திமுகவை அழிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை.. இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம்- சேகர் பாபு

திமுகவை அழிக்கும் வல்லமை இங்கிருக்கும் அரசியல் கட்சியில் யாருக்கும் இல்லை என்றும் இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Jan 16, 2025 - 10:53
 0
திமுகவை அழிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை.. இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம்- சேகர் பாபு
மு.க.ஸ்டாலின்-சேகர் பாபு

மாட்டுப் பொங்கல் தினத்தையொட்டி சென்னை சௌகார்பேட்டை மின்ட் சாலையில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்தவர்களின் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் அலங்கரிக்கப்பட்டு சமத்துவ மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் பேசியதாவது, சேலத்திலிருந்து தான் அரசியலையும் இது போன்ற பேட்டிகளையும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள ஏதாவது ஒன்று பேசிக்கொண்டு இருக்கிறார். அவரை களத்தில் எங்கும் காணவில்லை. ஆனால் களத்தில் வேரூன்றி இருக்கும் எங்கள் தலைவரை பற்றி பேசி வருகிறார்.

திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாடு முழுவதும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு வகைகளில் எங்கள் தலைவர் உத்தரவுக்கு இணங்க தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசுகளை வழங்கி உள்ளோம். பரவலாக எங்கும் அதிமுகவை சார்ந்தவர்கள் எந்த விதமான உதவிகளையும் செய்யவில்லை. வேரூன்றி இருக்கும் திமுகவை அழிக்கும் வல்லமை இங்கிருக்கும் அரசியல் கட்சியில் யாருக்கும் இல்லை. இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம்.

மேலும் படிக்க: திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிக்கிறது- மோடி பெருமிதம்

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு என்று எடுத்துக் கொண்டாலும் இதுபோல் காயங்கள் ஏற்படுவது இருக்க தான் செய்யும். அதற்காக பாரம்பரிய விளையாட்டை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி விட முடியாது தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கூடுதல் கவனத்தை அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.

காவி உடையணிந்து திருவள்ளுவரை ஆளுநரும், பாஜகவும் முன்னிறுத்துவது தொடர்பான கேள்விக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவருக்கு சிறப்பு செய்து வருவதால், வேறு வழியில்லாமல் அவர்களும் அவரை தூக்கி பிடிக்கிறார்கள். என்ன சாயம் பூச முற்பட்டாலும், முழுக்க முழுக்க அவர் கொள்கையை புகழை தூக்கி பிடிப்பது திமுகவாக தான் இருக்கும் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow