திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிக்கிறது- மோடி பெருமிதம்

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Jan 15, 2025 - 17:45
 0
திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிக்கிறது- மோடி பெருமிதம்
பிரதமர் நரேந்திர மோடி

தமிழ்நாட்டில் மாட்டு பொங்கல், திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திருவள்ளுவர் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி,  திருவள்ளுவரை போற்றி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நமது நாட்டின் மிகச்சிறந்த தத்துவஞானிகள், புலவர்கள் மற்றும்  சிந்தனையாளர்களில் ஒருவரான திருவள்ளுவரை திருவள்ளுவர் தினத்தில் நாம் நினைவுகூர்வோம். அவர் இயற்றிய திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிக்கிறது. 

அவரது போதனைகள் நீதி, கருணை, நேர்மை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் அவரது படைப்பான   திருக்குறள் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. பலவகையான பிரச்சனைகள் குறித்து ஆழமான நுண்ணறிவுகளை வழங்குகிறது. நமது சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாம்  தொடர்ந்து கடினமாகப்  பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட பதிவில், “பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும் மற்றும் மிகுந்த பயபக்தியுடனும் நினைவுகூர்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒவ்வொரு தனிநபருக்கும் அமைப்புக்கும் பொருந்தக்கூடிய ஒப்பற்ற வழிகாட்டியான திருக்குறளை  வழங்கினார். பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும், நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். 

சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒரு விரிவான நல்லொழுக்கக் குறியீட்டை அவர் வகுத்தார். இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில், அவர் நமது அன்றாட வழிகாட்டியாக விளங்கி வருகிறார். எனவே அவர் தினமும் நினைவுகூரப்பட்டு கொண்டாடப்பட வேண்டும்.  திருவள்ளுவரின் சிறந்த பக்தரான பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி, திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, காவி உடை தரித்த திருவள்ளுவர் புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்திய நிலையில் இந்த ஆண்டும் அதேபோன்று காவி உடை தரித்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த செயல் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow