NCC கேம்ப்பில் 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை... ஆக்ஷனில் இறங்கிய தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியைச் சேர்ந்த 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

Aug 22, 2024 - 02:55
Aug 22, 2024 - 15:37
 0
NCC கேம்ப்பில் 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை... ஆக்ஷனில் இறங்கிய தேசிய மனித உரிமைகள் ஆணையம்!
NCC கேம்ப்பில் 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை

சென்னை: பர்கூர் அருகேயுள்ள கந்திகுப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் என்சிசி முகாம் நடத்தப்பட்டுள்ளது. அதில் பங்கேற்ற 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்ற இந்த என்சிசி முகாமில் 17 மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் அந்த பள்ளி வளாகத்திலேயே தங்கியதாக சொல்லப்படுகிறது. இதனை பயன்படுத்தி சிலர் அந்த மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். 

அதாவது, என்சிசி பயிற்சியாளரான சிவராமன் என்பவர், 8ம் வகுப்பு படிக்கும் 12 வயது நிரம்பிய மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லைகொடுத்துள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி முதல்வரிடம் புகாரளித்தும், அவர் இந்த விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார். ஆனால் அந்த மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அப்போது தான் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டச் சம்பவம் மாணவியின் தாயாருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின்னர் அந்த மாணவி சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும், தனியார் பள்ளியின் தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், என்சிசி முகாம் நடத்திய சிவராமன் உள்ளிட்ட 12பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தனியார் பள்ளிகள் இயக்குநரகம் சார்பில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்களை உரிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என சென்னை டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 3 நாட்களுக்குள் காவல்துறை, மாநில அரசிடம் இருந்து விரிவான நடவடிக்கை குறித்தும் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி என்சிசி கேம்ப்பில் 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்கவுள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 4 ஆசிரியர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow