தியேட்டருக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் சீண்டல்.. சிறையில் தள்ளிய போலீஸ்
சிறுமியை செருப்பு கடை அழைத்து செல்வதாக கூறி, சினிமா தியேட்டர் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது சிறுமி கூச்சலிட்டதால் பொதுமக்கள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த கணவர் இறந்த பெண் ஒருவர், சென்னை ராயப்பேட்டை ஆயில் மங்கர் தெரு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (29) என்பவரது வீட்டில் வீட்டுவேலை செய்து வந்தார். தனக்கு ரூ.50,000 கடன் தேவைப்படுகிறது என்று சுரேஷிடம் கேட்டதாக தெரிகிறது.
சுரேஷும் ஐம்பதாயிரம் பணம் தருவதாக கூறியுள்ளார். அந்த பெண்ணுக்கு 14 வயது மகள் இருக்கிறார். சம்பவத்தன்று வீட்டிற்கு அந்த பெண் சிறுமியோடு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுமி காலில் செருப்பு இல்லை. பிறகு சுரேஷ் பின் சாப்பாட்டுக்காக ரூபாய் 200 பணம் கொடுத்துள்ளார்.
மேலும் என்னுடன் வா செருப்பு வாங்கி தருகிறேன் என இரு சக்கர வாகனத்தில் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் தியேட்டரில் சென்று படம் பார்த்துவிட்டு பிறகு செருப்பு வாங்கி தருவதாக கூறி படம் பார்க்க அழைத்துச் சென்றுள்ளார்.
படம் ஓடிக் கொண்டிருந்தபோது சுரேஷ் சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் சிறுமி அழுதுகொண்டு கூச்சலிட்டதால் படம் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் என்னவென்று கேட்டுள்ளனர். சிறுமி விவரத்தை கூற பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சுரேஷை தாக்கி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?