மஹாளய அமாவாசை.... சதுரகிரியை திக்குமுக்காட செய்யும் பக்தர்கள்!
மஹாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிக மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமாவாசை திதியன்று மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்து மதத்தினரின் பாரம்பரியமாகும். இந்த திதி கொடுக்க ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை சிறப்பானது. அதிலும் மஹாளய அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த மஹாளய அமாவாசைக்கு சர்வ பித்ரி அமாவாசை, பித்ர மோக்ஷ அமாவாசை, பித்ரு அமாவாசை உள்ளிட்ட பலப் பெயர்கள் உள்ளட்ன. இந்த நாளை, நவராத்ரி பண்டிகையின் முதல் நாளாகவும் கருதப்படுகிறது. 9 நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி பூஜை துர்கை அம்மனுக்காகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் சடங்குகளில் முன்னோர்களிடம் ஆசி பெறுவதற்கான பூஜைகள், பிண்ட தானம் மற்றும் பித்ரு தர்ப்பணம் ஆகியவை அடங்கும். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம், உடுப்புகள் உள்ளிட்டவை வழங்குவது கூடுதல் சிறப்பாகும்.
இந்த ஆண்டுக்கான மஹாளய அமாவாசை இன்று (அக்டோபர் 2) வருகிறது. அக்டோபர் 1, இரவு 9:39 மணிக்குத் தொடங்கும் அமாவாசை திதியானது அக்டோபர் 3, அதிகாலை 12:18 மணிக்கு நிறைவு பெருகிறது. சடங்குகளைச் செய்வதற்கான முக்கிய காலகட்டங்களில் குதுப் முஹூர்தா 11:12 முதல் மதியம் 12:00 மணி வரை, மற்றும் ரௌஹின் முஹூர்தா மதியம் 12:00 முதல் 12:47 வரை செய்யலாம். மதியம் 12:47 மணி முதல் 3:11 மணி வரை இந்த சடங்குகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
"மறந்து போனவனுக்கு மஹாளய அமாவாசை " என்பார்கள். அதாவது முன்னோர்களின் இறந்த தேதி தெரியாதவர்கள் அல்லது மறந்து போனவர்கள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால் 21 தலைமுறைகளை சேர்ந்த முன்னோர்கள் சொர்க்கத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை. இது பற்றிய குறிப்புகள் திருவெண்காடு கோயில் தல வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் நாளை அக்டோபர் 3ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளனர். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலில் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் கொண்டுசெல்கின்றனரா என வனத்துறையினர் தீவிர சோதனை செய்த பின்னரே மலையேற அனுமதி வழங்கி வருகின்றனர்.
மேலும் படிக்க: போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரணந்த பிரபல ரவுடி..
இதற்கிடையே திடீரென மழை பெய்தால் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் மலைப் பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும், கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் குளிப்பதற்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?