திருவண்ணாமலை தீபத் திருவிழா... சிறப்பாக நடைபெற்ற பந்தக்கால் முகூர்த்தம்!
உலக பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (செப். 23) காலை பந்தக்கால் முகூர்த்தம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோயில் பின்புறம் உள்ள மலையை சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம் சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாக கொண்டாடப்படுகிறது. எனவே இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வர். மேலும் இங்கு கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று (செப். 23) காலை பந்தக்கால் முகூர்த்தம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா பூர்வாங்க பணிகள் செய்திட பந்தக்கால் முகூர்த்த நடும் விழா வேத மந்திரங்கள் முழங்க நடப்பட்டது.
அண்ணாமலையார் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் வரும் டிசம்பர் 4ம் தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் அனுதினமும் காலை மற்றும் இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வருகிற டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 4.30 பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தகாலுக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து கோயில் பிரகாரங்களை சுற்றி வந்து ராஜகோபுரம் எதிரே வேத மந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டது.
மேலும் படிக்க: ஸ்டாலின் முடிவு சரியானது... அடுத்து உதயநிதி வந்தால்..... ஜவாஹீருல்லா உற்சாகம்!
உலகப் பிரசித்தி பெற்ற இந்த தீபத் திருவிழாவிற்கு ஆண்டுதோறும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோயில் நிர்வாகம் காவல்துறையினருடன் ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?