ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி மாத திருவிழா.. தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி மாத திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி தீமிதித்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

எடப்பாடி அருகே ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி மாத திருவிழாவை ஒட்டி நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பல்வேறு அலகுகளை குத்திக் கொண்டு தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சவுரியூரிலுள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி மாத திருவிழா கடந்த 15 தினங்களுக்கு முன்பு பூச்சாட்டுதழுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று இன்று தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக பக்தர்கள் இடுப்பலகு, முதுகலகு, விமான அலகு உள்ளிட்ட பல்வேறு அலகுகளை குத்திக் கொண்டு கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்டமான அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். முதலில் கோயில் பூசாரிகள் பூங்கரகம், அக்னி கரகத்துடன் தீமிதித்தனர். பின்னர் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அப்போது சில பக்தர்கள் குழந்தைகளை கையில் ஏந்தியபடியும், சிலர் விமான அலகு குத்திக் கொண்டும் தீமிதித்தனர். இக்காட்சி அனைவரையும் வியக்க வைத்தது. இந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி ஸ்ரீ சக்தி மாரியம்மன் சுவாமியை வழிபட்டு சென்றனர்.
What's Your Reaction?






