அண்ணாமலை கண்ட்ரோலில் மாஜிக்கள்? பாஜக வசமாகும் கொங்கு..? திருப்புமுனை ஏற்படுத்திய திருமணம்..!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாஜிக்கள் அண்ணாமலை வசம் வந்துவிட்டதாகவும், அதிமுகவின் பலமாக கருதப்படும் கொங்கு மண்டலம் பாஜக கண்ட்ரோலில் சென்றுவிட்டதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் எடப்பாடி பழனிசாமியை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Mar 8, 2025 - 20:35
 0
அண்ணாமலை கண்ட்ரோலில் மாஜிக்கள்? பாஜக வசமாகும் கொங்கு..? திருப்புமுனை ஏற்படுத்திய திருமணம்..!
அண்ணாமலை கண்ட்ரோலில் மாஜிக்கள்? பாஜக வசமாகும் கொங்கு..? திருப்புமுனை ஏற்படுத்திய திருமணம்..!

சென்னைக்கு நிகராக கோவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன்னை பிரமாண்டமாக பிம்பப்படுத்த முடிவு செய்திருக்கும் வேலுமணி, தன் வீட்டு திருமணத்தில் பிரபல ஹீரோக்களை கலந்துகொள்ளச் செய்ததன் மூலம் தன் வெயிட்டேஜை ரொம்பவே அதிகரித்துவிட்டார் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். இதுகுறித்து அதிமுக மாநில நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். 

வேலுமணியின் வீட்டு திருமணத்தைப் பார்த்தவர்களுக்கு, 'இது அ.தி.மு.க. குடும்ப திருமணமா அல்லது பா.ஜ.க. குடும்ப திருமணமா? என்று கேட்குமளவுக்கு அண்ணாமலை, முருகன், தமிழிசை, குஷ்பு என்று பா.ஜ.க. முகங்கள் குவிந்திருந்தனர். மேலும், அக்கட்சியின் மாநில தலைவர்கள் மட்டுமில்லாது மாவட்ட அளவிலான நிர்வாகிகளும் கலந்து கொண்டிருந்தது அ.தி.மு.க. நிர்வாகிகளையே அதிரவைத்தது என்கின்றனர். 

எடப்பாடியைத் தவிர கொங்கு மண்டலத்தின் அ.தி.மு.க. முகங்கள் அத்தனை பேரும் கடந்த மார்ச் 3ம் தேதியன்று கோவையில் வேலுமணி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு தரப்பட்ட முக்கியத்துவம், எடப்பாடியை கடும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளதாக அ.தி.மு.க.வில் புகைச்சல் கிளம்பியுள்ளதாம். 

எடப்பாடியாருக்கும் வேலுமணிக்கும் நடுவில் கடந்த சில மாதங்களாகவே நடந்த பனிப்போர், இந்த திருமணத்தில் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது என்றும்,  'பா.ஜ.க.வுடன் கூட்டணி, ஒன்றுபட்ட அ.தி.மு.க. இவை எல்லாம் வேலுமணியின் முக்கிய கோரிக்கைகள்... ஆனால், எடப்பாடியார் இதற்கு சம்மதிக்காத நிலையில்தான், பா.ஜ.க.வின் வழிகாட்டுதல்படி அ.தி.மு.க.வில் தனி ரூட் எடுத்து இறங்கினார் வேலுமணி என்று கூறப்படுகிறது.
 
'என் மகன் திருமணத்துக்கு அழைப்பு வைக்கிறேன்' எனும் பெயரில் தமிழ்நாடு முழுவதும் அதி.மு.க மா.செ.க்களை வேலுமணி சந்தித்துப் பேசியதாகவும், சில மாவட்டங்களில் பா.ஜ.க.வினரை சந்தித்து பேசியதாகவும் சென்ற செய்தி எடப்பாடியாரை கடும் ஆத்திரமடைய செய்ததாகக் கூறப்பட்டது. 'மாவட்டம் மாவட்டமா இப்படி பயணம் போறார்னா, வேலுமணியோட பிளான் தான் என்ன, என்னை ஓவர் டேக் பண்ண நினைக்கிறாரா?' என்று கொந்தளித்தாராம் எடப்பாடியார். இதனால் வேலுமணி வீட்டு திருமணத்தில் கலந்துக் கொள்ளாமல் எடப்பாடியார் தவிர்த்தார் என்று கூறப்படுகிறது. இதற்கெல்லாம் வருத்தப்படாத வேலுமணியோ, இந்த திருமணத்தில் அண்ணாமலையை முழுமையாக முன்னிலைப்படுத்திவிட்டார் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 

ஒரு நிகழ்வுக்கு எடப்பாடியார் வரும்போது எப்படி அதிமுக மாஜிக்கள் வரிசையாக எழுந்து நின்று வரவேற்பார்களோ அதேபோல அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, நத்தம் விசுவநாதன், செ.ம.வேலுசாமி, ராதாகிருஷ்ணன் என்று அத்தனை மாஜிக்களும் எழுந்து நின்று அண்ணாமலையை வரவேற்று மரியாதை செய்ததை பார்க்கும்போது, ஒத்துவராத எடப்பாடியாரை கழற்றிவிட இவர்கள் தயார் என்கிற மாதிரியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டதாக அதிமுக மாநில நிர்வாகி தெரிவிக்கிறார்.
 
அதோடு, மொத்த கொங்கு அ.தி.மு.க.வும் தனக்கு இப்படி பவ்யம் காட்டுவதை வகையாக பயன்படுத்திக்கொண்ட அண்ணாமலை, அதி.மு.க.வில் எடப்பாடியாருக்கு நேர் எதிராக சவால்விடும் செங்கோட்டையனின் கையைப் பிடித்து காட்டிய அந்த தனி சிக்னலும், அதற்கு செங்கோட்டையனின் தலையசைப்பும் எடப்பாடியாரை கொதிக்க வைத்துவிட்டதாக எம்.ஜி.ஆர் மாளிகை பட்சி கூறுகின்றது. 

இதையடுத்து, கல்யாண வீட்டு வீடியோ உடனடியாக எடப்பாடியாருக்கு கொண்டுசெல்லப்பட்டதோடு, அதை பார்த்த எடப்பாடி பழனிசாமி, 'என்னை கழட்டிவிட்டு, துரோகம் பண்ணிட்டாங்களேப்பா... நான் சி.எம்மா இருந்தபோதுகூட இவங்களெல்லாம் முழு அதிகாரத்துல ஆடுனப்பவும் நான் தடுக்கலையே. அதுக்கு இதுதான் நன்றியா? என்று உடைஞ்சு போய் கேட்டதாகவும், இன்னும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட கதறிட்டார் என்று எடப்பாடியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பிறகு தன்னோட மனசாட்சியாக நினைக்கும் சிலரோடு மட்டும் ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடியிடம், ”நாங்க சொல்லப்போறத கேட்டு கோபப்படாதீங்க. இப்படியே விலகியிருந்தா உங்களை முழுசா கழட்டி விட்டுடுவாங்கன்னுதான் தோணுது. சசிகலா, தினகரன், பன்னீர் நிலைமை உங்களுக்கும் வந்துடப்போகுது. அனுசரிச்சுப் போய் அதிகாரத்தை தக்கவெச்சுக்கிறதுதான் நல்லது.

பா.ஜ.கவை வெளிப்படையாக எதிர்ப்பதை நிறுத்துங்கள். தி.மு.க.வை மட்டுமே டார்கெட் பண்ணி பேசுங்க. அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டு மற்றதை அப்புறம் முடிவு பண்ணுங்கள்” என்று அவரோட ஆதரவாளர்களே அட்வைஸ் பண்ணியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பிறகுதான், 'எங்களின் ஒரே எதிரி தி.மு.க.தான். அந்தக் கட்சியை வீழ்த்துவதே குறிக்கோள்.

கூட்டணி குறித்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் சொல்ல முடியும்' என்று பேட்டி கொடுத்தார் எடப்பாடி என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இன்னும் அழுத்தமாக சொல்வதென்றால், பா.ஜ.க.வோடு கூட்டணிக்கு கிட்டத்தட்ட எடப்பாடியார் ரெடியாகிட்டார் என்றே தோன்றுவதாக நம்மிடம் பேசிய அதிமுக மாநில நிர்வாகி தெரிவித்துள்ளார். 

எனவே, எடப்பாடி மீதுள்ள அதிருப்தியால் கொங்கு மாஜிக்கள் அண்ணாமலைக்கு அசைந்துக் கொடுக்க தொடங்கியுள்ளதாகக் கூறப்படுவது எம்.ஜி.ஆர் மாளிகையை ஆட்டம் காண வைத்துள்ளது. இதுகுறித்து எடப்பாடி செய்யப்போவது என்ன? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow