குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள்.. அறிக்கை தாக்கல் உயர்நீதிமன்றம் உத்தரவு..!
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் எம் ஜோதிராமன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக 2021 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது என்றும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டங்கள் அமல்படுத்துவது தொடர்பாக தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உறுப்பினர்கள் இல்லாமல் இருப்பதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கலைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதால், ஆணையத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அரசின் கருத்துக்களை அறிந்து தெரிவிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டங்கள் அமல்படுத்தப்பட்டது தொடர்பாக தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கும் புதுச்சேரி அரசுக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 31ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
What's Your Reaction?