காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - அமைச்சர் தகவல்

மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அண்ணாவின் பெயரால் 8 மாதங்களில் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Mar 6, 2025 - 18:10
 0
காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - அமைச்சர் தகவல்
காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - அமைச்சர் தகவல்

சென்னை வேலப்பன்சாவடி அருகே உள்ள சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கதிரியக்க சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். 

பின்னர் விழா மேடையில் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், "ஐநா மன்றத்தின் பாராட்டுகளை பெற்ற திட்டமாக இல்லம் தேடி மருத்துவம் உள்ளது. விபத்து களுக்காக தொடங்கப்பட்ட இன்னுயிர் காப்போம் திட்ட மூலம் இதுவரை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலன் அடைந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரோபோடிக் புற்றுநோய் சிகிச்சை கருவியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த கருவி இந்தியாவிலேயே எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் உள்ளிட்ட ஒரு சில மருத்துவமனைகளில் மட்டும் இருக்கக்கூடிய வசதியாகும்.

இதன் மூலம் ஏராளமான மக்கள் புற்று நோய்க்கு சிறந்த சிகிச்சையை பெற்று வருகின்றனர். ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அதிநவீன இரட்டை பலூன் எண்டோஸ்கோபி சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளில் அதிநவீன தொழில்நுட்ப சிகிச்சை வழங்கப்படுகிறது. புற்று நோய் என்பது இன்று உலகத்தின் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

தமிழகத்திலேயே ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் அதிக புற்றுநோய் பாதிப்பு இருப்பதை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி அங்கு சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டு புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் காஞ்சிபுரத்தில் 250 கோடி ரூபாய் செலவில் 250 படுக்கைகள் கொண்ட அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டு வருகிறது

இந்தியாவிலேயே மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் கவரப்பேட்டையில் கட்டப்படும் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தான் பெரிய ஆராய்ச்சி மையம். அது இன்னும் எட்டு மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது" என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow