கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண நிகழ்வு கோலாகலம்!
கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஐப்பசி மாத திருக்கல்யாண நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கந்த சஷ்டியை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் நேற்று (நவ. 07) இரவு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி மிகக் கோலாகலமாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று (நவ. 08) பல்வேறு முருகன் ஆலயங்களில் வள்ளி மற்றும் தெய்வானைக்கு முருகப்பெருமானுடன் திருக்கல்யாண வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கரூர் வெண்ணைமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இன்று ஆலய மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்பு ஆலய மண்டபத்தில் திருமண கோலத்தில் சுவாமியை கொலுவிருக்க செய்தனர்.
தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க மாப்பிள்ளை சீர்வரிசை நடைபெற்று, ஆலய மண்டபத்தில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. பின்னர் வள்ளி, தெய்வானை மற்றும் பாலசுப்ரமணியசுவாமிகளுக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சியும் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. இதையடுத்து தெய்வானை மற்றும் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால்பழம் கொடுக்கும் நிகழ்வு மற்றும் மாலை மாற்றும் நிகழ்வும் நடைபெற்றது. மிக பிரமாண்டமாக நடைபெற்ற இத்திருக்கல்யாண நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து மொய் வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று மொய் வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பக்தர்களின் கோரிக்கை நிறைவேறுவதாக ஐதீகம். அதன்படி ஏராளமான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளுடைய ஜாதகத்தை திருக்கல்யாண நிகழ்வில் சுவாமி பாதங்களில் வைத்து தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய திருக்கல்யாண நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால், பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.
What's Your Reaction?