நடிகர் தர்ஷன் வேறு சிறைக்கு மாற்றம்.. சிறையில் ‘ஜாலி’யாக இருந்ததை அடுத்து நடவடிக்கை..
நடிகர் தர்ஷன் நண்பர்களுடன் அமர்ந்து சிகரெட் பிடிக்கும் புகைப்படம் வெளியானதை அடுத்து, அவரை வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் ரசிகரை கடத்தி, கொலை செய்த வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து 17 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜூலை மாதம், நீதிமன்றக் காவலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் தர்ஷனும் அவருடன் கைது செய்யப்பட்ட சிலரும் பார்க் போன்ற ஒரு இடத்தில் அமர்ந்து காபி குடிப்பதும், சிகரெட் பிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டது. அதில், சிறையில் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் காபி கோப்பை மற்றும் சிகரெட் உடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
அவருடன் மூன்று பேர் அப்போது அமர்ந்து பேசிக் கொண்டும் இருந்தனர். தொடர்ந்து, தற்போது வீடியோ காலில் தர்ஷன் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில், தர்ஷன் வெளிச்சமான ஒரு அறையில் அமர்ந்துள்ளார். எதிர்முனையில் பேசியவர் உணவு சாப்பிட்டீர்களா என கேட்க, தர்ஷனும் தலையை ஆட்டி சாப்பிட்டதாக சொல்கிறார்.
சுமார் 25 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவை பார்த்து பலர் அதிர்ச்சியடைந்த நிலையில், இது தொடர்பாக காவல்துறை உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியது. அதன்படி, தர்ஷனுக்கு சலுகை காட்டிய பெங்களூரு பரப்பன அக்ஹர ஹார சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்த தெரிவித்த கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், “சிறையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், தொடர்புடைய 7 அதிகாரிகளை கண்டறிந்து, அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு குறைபாடு காரணமாக நடைபெற்ற, இந்த விஷயம் குறித்து, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், கன்னட நடிகர் தர்ஷனை, பரப்பன அக்ரஹாரம் சிறையில் இருந்து பெல்லாரி சிறைக்கு மாற்ற பெங்களூரு நகர காவல்துறைக்கு உள்ளூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து, போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக 3 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மத்திய குற்றப்பிரிவு சமீபத்தில் நடத்திய சோதனையின் போது, குற்றவியல் ஆதாரங்கள் எதுவும் சிறைப்பகுதியில் கிடைக்கவில்லை எனவும், ஆனால் ஆய்வுக் குழு வருவதற்கு முன்பு சில பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற கவலை உள்ளதாகவும் தெரிவித்தார்.
What's Your Reaction?