ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்.. பலத்த பாதுகாப்புடன் பரபர வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு 24 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் தேர்தலை பயங்கரவாதிகள் சீர்குலைக்க முயற்சிக்கலாம் என்பதால் பாதுகாப்புப் படையினர் முழு உஷார் நிலையில் கண்காணித்து வருகின்றனர்.

Sep 18, 2024 - 07:39
Sep 18, 2024 - 09:41
 0
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்.. பலத்த பாதுகாப்புடன் பரபர வாக்குப்பதிவு
jammu and kashmir election

ஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி, மக்கள் ஜனநாயகக் கட்சி, பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹா கட்சி- ஜமாத் இ இஸ்லாமி கூட்டணி, ஆம் ஆத்மி உள்ளிட்டவை களத்தில் உள்ளன.


ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த போது கடந்த 2014ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் 2 ஆக பிரிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் 5 ஆண்டுகால பதவிக் காலம் கொண்ட சட்டசபையுடனும் லடாக் யூனியன் பிரதேசம் சட்டசபையே இல்லாததாகவும் இருக்கும் எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டன. 2019-க்கு முன்னர் வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டசபை பதவிக் காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டசபை தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது.

ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 24 தொகுதிகளில் மொத்தம் 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் சுமார் 23 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்.  ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இன்று 24 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. 26 தொகுதிகளில் செப்டம்பர் 25 மற்றும் 40 தொகுதிகளில் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 2-வது மற்றும் 3-வது கட்ட தேர்தல் நடைபெறும். அனைத்து வாக்குகளும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் 24 தொகுதிகளில் காஷ்மீர் பிராந்தியத்தில் 16 தொகுதிகளிலும் ஜம்முவில் 8 தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன. முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 219 பேர் வேட்பாளர்கள். இவர்களில் 90 பேர் சுயேட்சை வேட்பாளர்கள்.

முதல் கட்ட தேர்தலில் வாக்காளிக்கும் வாக்காளர்கள் 23,27,580. இவர்களில் ஆண் வாக்காளர்கள் 11,76,462 , பெண் வாக்காளர்கள் 11,51,058. 24 தொகுதிகளிலும் 3,276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 14,000 பேர் முதல் கட்ட தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow