மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறை... 603 ரன்கள் குவித்து இந்திய 'சிங்கப் பெண்கள்' சாதனை!
சென்னை: மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் 603 ரன்கள் குவித்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய மகளிர் அணியும், தென்னாப்பிரிக்கா மகளிர் அணியும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டி நேற்று தொடங்கிய நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனாவும், ஷஃபாலி வர்மாவும் தென்னாப்பிரிக்கா வீராங்கனைகளின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறிடித்தனர். ஸ்மிருதி மந்தனா தனது டிரேட் மார்க் ஷாட்கள் மூலம் பெளண்டரிகளாக விளாசித்தள்ள, ஷஃபாலி வர்மா சிக்ஸர் மழை பொழிந்தார்.
தென்னாப்பிரிக்கா கேப்டன் லாரா வால்வார்ட், 7 பெளலர்களை பயன்படுத்தி பார்த்தும் 50 ஓவர் கிரிக்கெட் போன்று அதிரடியாக ஆடிய இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. தொடர்ந்து ஆடிய ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா அடுத்தடுத்து சதம் விளாசினார்கள்.
ஸ்கோர் 292 ரன்களாக உயர்ந்தபோது ஒருவழியாக இந்த ஜோடி பிரிந்தது. 27 பெளண்டரிகள் 1 சிக்சருடன் சதம் விளாசிய (161 பந்தில் 149 ரன்) ஸ்மிருதி மந்தனா, டக்கர் பந்தில் அவுட்டானார். இந்திய மகளிர் கிரிக்கெட்டில் 250 ரன்களை கடந்த முதல் ஜோடி என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா-ஷஃபாலி வர்மா படைத்தனர்.
தொடர்ந்து அதிவேகமாக இரட்டை சதம் விளாசிய 20 வயதான ஷஃபாலி வர்மா 197 பந்தில் 205 ரன்கள் குவித்து அவுட்டானார். இதில் 23 பெளண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும். முதல் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழந்து 525 ரன்கள் குவித்தது. மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகப்பட்ச ரன்கள் இதுதான்.
இன்று 2வது நாளாக ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 600 ரன்களை கடப்பது இதுதான் முதன்முறை. அந்த புதிய சாதனையை நமது வீராங்கனைகள் படைத்துள்ளனர்.
இதற்கு முன்னதாக இந்த ஆண்டு ஆஸ்திரேலிய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் இழந்து 579 ரன்கள் எடுத்ததே இதுவரை அதிகப்பட்சமாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி டிக்ளேர் செய்ததால் பின்பு தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வரும் தென்னாப்பிரிக்கா அணி தற்போது வரை 2 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
What's Your Reaction?