சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு... பெரும் கனவு நனவாகியுள்ளதாக மகிழ்ச்சி!

ஜடேஜா கடந்த 2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியின் மூலம் இந்திய டி20 அணியில் அறிமுகமானார். 74 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 515 ரன்கள் குவித்துள்ளார்.

Jun 30, 2024 - 23:23
Jul 1, 2024 - 21:42
 0
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு... பெரும் கனவு நனவாகியுள்ளதாக மகிழ்ச்சி!
ரவீந்திர ஜடேஜா

பார்படாஸ்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று அசத்தியுள்ளது. வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு, சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இறுதிப்போட்டி முடிந்தவுடன் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதன்பின்பு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக கூறினார். இந்த வரிசையில் தற்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜடேஜா, ''இதயம் நிறைந்த நன்றியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். டி20 கிரிக்கெட்டில் எனது சிறந்த செயல்பாட்டை அணிக்கு வழங்கியுள்ளேன். டெஸ்ட் மற்றும் 50 ஓவர் போட்டியிலும் எனது சிறந்த பங்களிப்பை இந்திய அணிக்கு வழங்குவேன்.

டி20 உலகக்கோப்பையை வென்றதன்மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. இது எனது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரும் உச்சம். ரசிகர்கள் கொடுத்த அசைக்க முடியாத ஆதரவு, இனிய நினைவுகள் மற்றும் மகழ்ச்சிக்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

ஜடேஜா கடந்த 2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியின் மூலம் இந்திய டி20 அணியில் அறிமுகமானார். 74 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 515 ரன்கள் குவித்துள்ளார். சிறப்பாக பவுலிங் செய்து 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பீல்டிங்கில் அசத்தும் ஜடேஜா 28 கேட்ச்களையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட ஜடேஜாவுக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே வேளையில் அடுத்தடுத்து நட்சத்திர வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow