Shikhar Dhawan : ஓய்வுபெற்ற பின் களமிறங்கிய ஷிகர் தவான்.. முதல் போட்டியிலேயே வெற்றி
Shikhar Dhawan in Legends League Cricket 2024 : இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான், சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் லீக் போட்டியில் பங்கேற்றார்.
Shikhar Dhawan in Legends League Cricket 2024 : இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக கலக்கியவர் ஷிகர் தவான். இடது கை ஆட்டக்காரரான இவர், இந்திய அணிக்கு வலிமையான ஓபனராக திகந்தார். சச்சின் – கங்குலி கூட்டணிக்குப் பின்னர், ஓபனிங்கில் இந்திய அணிக்கு பெரும் பலம் சேர்த்தவர். 1985 டிசம்பர் 5ம் தேதி பிறந்த ஷிகர் தவான், டெல்லியைச் சேர்ந்த ஷிகர் தவான் 17, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடி கவனம் ஈர்த்தார்.
அதன்பின்னர் 2010 விசாகப்படிணத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானா ஷிகர் தவான். இதுவரை 167 பேட்டிகளில் விளையாடியுள்ள ஷிகர் தவான், 164 இன்னிங்ஸில் பேட்டிங் செய்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 17 சதங்கள், 39 அரை சதங்களுடன் மொத்தம் 6793 ரன்கள் குவித்துள்ளார்.
2015ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த ஷிகர் தவான், 2013, 2017ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அதிக ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 38வது வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தற்போது, முன்னாள் வீரர்கள் பலரும் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, இர்ஃபான் பதான், ஹர்பஜன் சிங், முஹமது கைஃப், ஸ்ரீசந்த், ஸ்டூவர்ட் பின்னி, நமன் ஓஜா, வினய் குமார் உள்ளிட்ட இந்திய வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அதேபோல், கிறிஸ் கெயில், லெண்டி சிம்மன்ஸ், ராஸ் டெய்லர் கெவின் ஓ பிரையன், ஷெல்டன் காட்ரெல், டான் கிறிஸ்டியன், லியம் பிளங்கெட் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் பங்கெடுத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற குஜராத் கிரேட்ஸ் மற்றும் டோயம் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. ஹைதராபாத் அணிக்கு சுரேஷ் ரெய்னாவும், குஜராத் அணிக்கு ஷிகர் தவானும் தலைமை தாங்கினர். இதில், டோயம் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, கேப்டன் சுரேஷ் ரெய்னா 44 ரன்களும், பீட்டர் ட்ரெகோ 36 ரன்களும், குர்கீரத் சிங் 26 ரன்களும் எடுத்தனர். குஜராத் அணி தரப்பில், பிளங்கெட், மனன் சர்மா, பிரசன்னா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராஹ் அணியில் ஷிகர் தவான் 21 ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மோர்னே வான் விக் 69 பந்துகளில் [9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்] 115 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். லெண்டி சிம்மன்ஸ் 20 ரன்களும், யஷ்பால் சிங் 13 ரன்களும் எடுத்தனர். இதனால், குஜராத் அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
What's Your Reaction?