இளமையின் பொலிவைத் தரும் கொலாஜனைப் பெறுவது எப்படி?

முகத்தைப் பொலிவுடன் வைத்துக் கொண்டு இளமையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் கொலாஜன் அவசியம். எந்தெந்த வகைகளில் எல்லாம் கொலாஜனைப் பெற முடியும் என்றும் கொலாஜன் க்ரீம் அல்லது சப்ளிமெண்ட் இவற்றில் எது சிறந்தது என்றும் இக்கட்டுரையில் அலசலாம்.

Sep 9, 2024 - 19:31
 0
இளமையின் பொலிவைத் தரும் கொலாஜனைப் பெறுவது எப்படி?
collagen for skin

 இளமையாக இருக்க வேண்டும் என்று யார்தான் விரும்ப மாட்டார்கள். வயது ஆக ஆக முகத்தின் பொலிவு மங்கி, சுருக்கங்கள் உருவாகும். வயது முதிர்ச்சியாகும் செயல்பாட்டைத் தடுக்கும் ஏண்டி ஏஜிங் சிகிச்சைகள் இன்றைக்கு நிறைய வந்து விட்டன. சரும நலன் சார்ந்து வாழ்வியலை அமைத்துக் கொள்வதன் மூலம் நமது இளமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அவற்றுள் ஒன்றாக இருக்கிறது கொலாஜன் என்கிற சப்ளிமெண்ட். இதன் பயன்பாடு குறித்து நமக்கு விரிவாக விளக்குகிறார் சரும நல மருத்துவர் பூர்ணிமா...

கொலாஜன் என்றால் என்ன? 

ஏண்டி ஏஜிங் பற்றித் தெரிந்து கொண்டால்தான் கொலாஜன் பற்றிப் புரிந்து கொள்ள முடியும். முகம் பொலிவோடு இருக்க வேண்டுமென்றால் சருமம் ஹைட்ரேட் ஆக இருக்க வேண்டும். இளமையில் நமது சருமம் ஹைட்ரேட் ஆகவும், தோல் சுருக்கங்கள் இல்லாமல் நன்கு திடமாகவும் இருக்கும். வயது ஆக ஆக சருமம் தொய்வடைந்து போவதால் முதுமைத் தோற்றம் வந்து விடும். எலும்புக்கூடு எப்படி நம் உடலின் கட்டுமானத்துக்கு ஆதாரமாக இருக்கிறதோ அதே போல் முகக் கட்டுமானத்துக்கு கொலாஜன் இருக்கிறது. கொலாஜன் என்பது ஒரு வகையான புரதம்தான் அதனை உணவு மற்றும் சப்ளிமெண்ட் வழியாக உட்கொண்டோம் என்றால் முகத்தின் கட்டுமானம் நன்றாக இருக்கும். இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க முடியும். சருமத்தை தொய்வின்றி இறுக்கமாக்கும்.

கொலாஜனை எப்படிப் பெறுவது?

ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 8 கிராம் கொலாஜன் தேவைப்படும். கொலாஜனுக்கென சப்ளிமெண்டுகள் விற்கப்படுகின்றன. மருத்துவர் பரிந்துரையின்றி யார் வேண்டுமானாலும் அந்த சப்ளிமெண்டை எடுத்துக் கொள்ளலாம். நல்ல பிராண்ட் ஆக பார்த்து வாங்கிப் பயன்படுத்துவது அவசியம். சைவம் சாப்பிடுகிறவர்கள் சப்ளிமெண்ட் வழியாக மட்டும்தான் கொலாஜனை எடுத்துக் கொள்ள முடியும். உணவின் வழியாகவும் நமக்கு கொலாஜன் கிடைக்கும். ஆனால் அது அசைவ உணவுகளில் இருந்து மட்டும்தான் கிடைக்கும். புரதம் மிக்க அசைவ உணவுகள் எல்லாவற்றில் இருந்தும் கொலாஜன் கிடைக்கும். அதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஆட்டுக்கறி மற்றும் மீன் வகைகளில் இருந்து கொலாஜனைப் பெறலாம். 

ஆட்டுக்கால் பாயாவை நீண்ட நேரம் வேக விட்டு மைய வெந்த பிறகு அதன் சூப்பைக் குடிக்கும்போது அதில் இருந்து நிறைய கொலாஜனை நாம் பெற முடியும். மத்தி மீன் போன்று கொழ கொழப்பான மீன்களில் இருந்து கொலாஜன் நிறைய கிடைக்கும். அசைவம் சாப்பிடுகிறவர்கள் சரும நலனை அடிப்படையாக வைத்து அடிக்கடி ஆட்டுக்கால் பாயா குடிக்கலாம் அல்லது மீன் வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். 

சப்ளிமெண்ட் பயன்படுத்தும் முறை

கொலாஜன் க்ரீம் என்றெல்லாம் சருமத்தில் தடவுகிற க்ரீம்கள் விற்கப்படுகின்றன. கொலாஜனை நாம் உட்கொள்வதன் மூலம்தான் பெற முடியுமோ தவிர மேலே தடவுவதால் எல்லாம் கிடைக்காது. கோழிக்கறியை சாப்பிட்டால்தான் அதில் இருந்து புரதம் கிடைக்கும். சருமத்தின் மேல் தடவினால் கிடைக்காதல்லவா? அது மாதிரிதான். கொலாஜன் க்ரீம்களைத் தடவுவதால் எந்தப் பயனும் இல்லை. சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். கொலாஜன் சப்ளிமெண்டை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டுமா? என்றால் இல்லை. சப்ளிமெண்ட் எடுத்துக் கொண்டு 3 - 6 மாதங்களிலேயே நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம். ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்ட பிறகு அடுத்த ஆறு மாதங்களுக்கு நிறுத்திக் கொள்ளலாம். இது போன்று இடைவிட்டு விட்டு எடுத்துக் கொள்ளலாம். சப்ளிமெண்டை நிறுத்துகிற கால கட்டத்தில் ஆட்டுக்கால் பாயா மற்றும் மீன் வகைகள் என கொலாஜன் கிடைக்கிற உணவுகளை எடுத்துக்  கொள்ளலாம்.  

சிகிச்சைகள்

லேசர் சிகிச்சை மூலம் கொலாஜனைத் தூண்டி விட்டு புதிய கொலாஜன் உற்பத்தி செய்யலாம். மைக்ரோ நீடிலிங் மூலமும் கொலாஜனைத் தூண்டி சருமத்தை தொய்வடையாமல் வைத்துக் கொள்ளலாம். ரெட்டினால் மூலமும் தூண்டலாம். க்ரீம்களைப் பொறுத்த வரை எல்லாவற்றுக்கும் அரசன் என்றால் அது சன் ஸ்க்ரீன் தான்... சன் ஸ்க்ரீன் பயன்பாட்டின் மூலமும் முகத்தின் பொலிவைத் தக்க வைத்துக் கொள்ளலாம்” என்கிறார் பூர்ணிமா. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow