முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் வெடிகுண்டு மிரட்டல்.. சைபர் கிரைம் விசாரணை..
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் வந்த மின்னஞ்சலை அடுத்து, சைபர் கிரைம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அபிராமபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் பள்ளி வளாகம் முழுவதும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் இமெயில் மூலம் பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அபிராமிபுரத்தில் ஆர்.கே நான்காவது குறுக்கு தெருவில் உள்ள தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளி நிர்வாகம் உடனடியாக அபிராமிபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீயணைப்புத் துறைவினருக்கு தகவல் தெரிவித்தனர். பள்ளி வளாகம் முழுவதும் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு சோதனை கருவிகளைக் கொண்டு பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று மணி நேரத்திற்கு மேலாக வெடிகுண்டு மிரட்டல் குறித்து எந்வொரு தடயமும் பள்ளி வளாகத்துக்குள்ளே கிடைக்காததால் மிரட்டல் போலி என்பது உறுதி செய்யப்பட்டு இருந்தபோதிலும், சந்தேகத்துக்கிடமான வகையில் ஏதேனும் மர்ம பொருட்கள் பள்ளியில் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணையும் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.
அடிக்கடி பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவங்களில் டார்க் நெட் மூலம் இந்த மிரட்டல் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக சென்னை காவல் ஆணையர் தகவல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் குற்றவாளிகளை விரைந்து பிடித்து வெடிகுண்டு மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
What's Your Reaction?