மக்களை அச்சுறுத்தும் மெட்ராஸ் ஐ... மருத்துவர்கள் கூறிய வழிகாட்டிகள் என்னென்ன?

பருவமழை காலங்களில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோயிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குகிறது இந்த செய்து தொகுப்பு.

Nov 6, 2024 - 03:47
 0
மக்களை அச்சுறுத்தும் மெட்ராஸ் ஐ... மருத்துவர்கள் கூறிய வழிகாட்டிகள் என்னென்ன?
மக்களை அச்சுறுத்தும் மெட்ராஸ் ஐ... மருத்துவர்கள் கூறிய வழிகாட்டிகள் என்னென்ன?

கண்ணின் முன் பகுதியான வெள்ளைப் படலத்தில் (Conjuncton) வைரஸால் ஏற்படும் ஒருவகை கண்நோய், “மெட்ராஸ் ஐ” என்று அழைக்கப்படுகிறது. மெட்ராஸ் ஐ நோயானது பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவக்கூடிய ஒரு தொற்று நோய். கண் உறுத்தல், கண் சிவப்பு நிறமாகுதல், கண்களில் அதிகம் கண்ணீர் சுரத்தல், கண்ணில் அரிப்பு ஏற்படுதல், கண் வீங்குதல், கண்ணில் அழுக்கு சேருதல், கண்ணின் இமைகள் ஒட்டிக்கொள்ளுதல் ஆகியவை மெட்ராஸ் ஐ  நோய்க்கான அறிகுறிகள் ஆகும். இந்நோய் மழைக்காலம் தொடங்கும் தருவாயில் அதிகமாக காணப்படுவது வழக்கம். ஆண்டுதோறும்  அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்நோய் அதிகமாகப் பரவக்கூடியதாகும். 

மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை தங்கள் வீட்டிலேயே, தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்லாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மெட்ராஸ் ஐ நோயை தாங்களாகவே குணப்படுத்திக்கொள்வதாக எண்ணி சுய சிகிச்சை செய்துகொள்ள வேண்டாம் என்றும், தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தை விளைவிக்கும் என்றும் முறையான கண் மருத்துவமனையை அணுகி அவர்களின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர். மேலும் பொதுவாகவே 4 முதல் 5 நாட்களில் மெட்ராஸ் ஐ தொற்று தானாகவே குணமடைந்துவிடும் என்பதால் பொதுமக்கள் அச்சப்படத்தேவை இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மழைக்காலங்களில் மெட்ராஸ் ஐ தவிர்த்து கண்களில் "பாலன்" எனப்படும் அலர்ஜியானது ஏற்படும் என்றும் இதன்மூலம் கண்கள் சிவந்து கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுமட்டுமில்லாமல் மழைக்காலத்தில் இதுபோன்ற அலர்ஜி ஏற்படுவது மிகவும் சாதாரண ஒன்று என்றும் ஓரிரு நாட்களில் இது குணமடைந்துவிடும் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும், மழைக்காலங்களில் வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவை வாய்ப்பு உள்ளதால் இதன் மூலம் கண்களில் பாதிப்பு ஏற்படும். அவ்வாரு இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். மேலும் கண்கள் சிவந்து மெட்ராஸ் ஐ இருப்பது உறுதியான பிறகு காலாவதியான கண் மருந்துகளை உபயோகப்படுத்த வேண்டாம். இதன் மூலம் கண்களின் பார்வை பாதிக்கவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow