ரஜினிகாந்த் படமா? இயக்குனர் த.செ.ஞானவேல் படமா? வேட்டையன் எப்படி இருக்குது?
கல்வியை சுற்றி நடக்கும் வியாபாரம், கார்ப்பரேட் தாக்கம், நுழைவு தேர்வுகளால் மாணவர்கள் பாதிக்கப்படும் விதம், ஏழை, அரசு பள்ளி மாணவர்களின் நிலை, அரசியல்வாதிகள் தலையீடு, பெற்றோர்களின் மனநிலை, மனிதஉரிமை, என்கவுன்டர்களுக்குபின்னால் இருக்கும் அரசியல் என பல அழுத்தமான விஷயங்களை வேட்டையன் பேசுகிறது.
வேட்டையன் விமர்சனம்./ ரேட்டிங். 3.5/5
லைகா தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், மஞ்சுவாரியர், துஷாராவிஜயன், அபிராமி, ராணா, ரித்திகாசிங் மற்றும் அமிதாப்பச்சன் கவுரவ வேடத்தில் நடித்த படம் வேட்டையன். இயக்குனர் வெச்ச குறி தப்பியதா? அல்லது சரியாக செயல்பட்டு இரை விழுந்ததா? ரஜினிகாந்த் நடிப்பு, படம் எப்படி? இதோ சுடச்சுட விமர்சனம்?
கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்பியாக இருக்கும் ரஜினிகாந்த் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட். ரவுடிகளை, சட்டத்துக்கு புறம்பாக வேலை செய்பவர்களை டக்கு, டக்குனு சுட்டுத்தள்ளுகிறார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் மத்தியில் வேட்டையன் என்று செல்லப்பெயர். அதே மாவட்டத்தில் அரசு பள்ளியில் டீச்சராக வேலை செய்யும் துஷாரா தனது பள்ளியில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கஞ்சா மூட்டைகள் குறித்து ரஜினிக்கு கடிதம் எழுத, தனது பாணியில் அங்கே களம் இறங்கி சிலரை போட்டுதள்ளுகிறார் ரஜினிகாந்த். துஷாராவுக்கு நல்ல பெயர். சென்னைக்கு மாற்றலாகி போகிறார். சில மாதங்களுக்குபின் பள்ளியில் வைத்தே ஒருவரால் கொடூரமான முறையில் கற்பழித்து கொல்லப்படுகிறார் துஷாரா. கொந்தளிக்கும் ரஜினிகாந்த் நான்சென்னைக்கு வருகிறேன். அந்த வழக்கை எனக்கு கொடுங்க என்று கேட்க, உயர் அதிகாரிகள் மறுக்கிறார்கள். இதற்கிடையில் மனிதஉரிமை ஆர்வலர், மாஜி நீதிபதியான அமிதாப்பச்சன் தலைமையிலான குழு என்கவுன்டருக்கு எதிராக போராடுகிறது. மனித உயிர்களை துப்பாக்கிக்கு இரை ஆக்க கூடாது என்று வாய்ஸ் கொடுக்கிறது.
ஒரு கட்டத்தில் பிரஷர் காரணமாக, ரஜினியிடம் அந்த வழக்கை ஒப்படைத்து, 10 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று டிஜினி உத்தரவு போடுகிறார்.. ரித்திகாசிங், போலீஸ் இன்பார்மர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளரான பகத்பாசில் மற்றும் போலீஸ் டீம் உதவியுடன், அதிரடி விசாரணை நடத்தி 48 மணி நேரத்தில் குணா என்ற இளைஞரை போட்டு தள்ளுகிறார் ரஜினிகாந்த். ஆனால், ஒரு கட்டத்தில் குணா குற்றவாளி அல்ல, அவர் துஷாராவின் நண்பர் என தகவல் வர, ரஜினி குழப்பமடைகிறார். அமிதாப்பச்சன் தலைமையிலான குழுவும் அந்த என்கவுன்டர் குறித்து விசாரணை நடத்தி, அது தவறு, அப்பாவி கொல்லப்பட்டார். நமக்குதேவை தரமான நீதி, விரைவான நீதி அல்ல என்கிறது. அப்படியானால் துஷாராவை கொன்றது யார் என்று ரஜினி தீவிரமாக விசாரிக்கிறார். அப்போது பல திருப்பங்கள், சேசிங், சட்ட சிக்கல்கள், கடைசியில் குற்றவாளியை கண்டுபிடித்து என்கவுன்டர் செய்தாரா? அமிதாப்பச்சன் கருத்தை ஏற்றாரா என்பது கிளைமாக்ஸ்
முதலில் இது ரஜினிகாந்த் படமா? ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் படமா என்றால், முதற்பாதி ரஜினிகாந்த் படம், பிற்பாதி இயக்குனர் டச் எனலாம். இன்னும் விரிவாக சொன்னால் 60 சதவீதம் இயக்குனர் படம், 40 சதவீதம் ரஜினி படம் எனலாம். ஆரம்பம் முதல் கடைசி வரை ரஜினிக்காக பில்டப், மாஸ் சீன்கள், ஸ்டைல், வசனங்கள் ரசிகர்களை உற்சாகமடைய வைக்கிறது. மனைவி பற்றி அவர் அடிக்கும் கமென்ட் நச். மனசிலாயோ பாடல் ஓகே. (இன்னும் விஷூவலில் மிரட்டியிருக்கலாம்). ரஜினி போன்ற ஒரு மாஸ் ஹீரோ, இப்படி மனித உரிமை பேசும் கதையில், என்கவுன்டருக்கு எதிரான கதையில், கல்வியை வியாபாரம் ஆக்குவது தவறு என்ற கருவில் நடித்ததை பாராட்டலாம். குறிப்பாக, 2ம் பாதியில் தனது பாணியில் இருந்து விலகி, இயக்குனர் பாணி்க்கு நகர்ந்ததும் முக்கியமான விஷயம். என்ன, சண்டைக்காட்சிகள், பாடல்காட்சிகள், கிளைமாக்ஸ் அவரின் ரசிகர்களுக்கே அவ்வளவாக பிடிக்கவில்லை. ஜெயிலர் படத்தை ஒப்பிட்டால் ரொம்ப குறைவு என பீல் பண்ணுகிறார்கள். இயக்குனரும் ஜெய்பீம் அளவுக்கு அழுத்தமான திரைக்கதையை தரவில்லை. ஏனோ, தெலுங்குகாரர்களை வில்லன்களாக காண்பிக்கும் பழக்கம், தமிழ்சினிமாவில் அதிகரிக்கிறது. இதிலும் அப்படியே
முதன்முறையாக அமிதாப்பச்சன் என்ற பெரிய நடிகர் தமிழி்ல் படம் பண்ணுகிறார். அதுவும், ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பில் போய் அமர்ந்தால், அவர்கள் சம்பந்தப்பட்ட சீன்கள் ஏமாற்றமே, எமோஷனலாக கூட கனெக்ட் ஆகவில்லை. அமிதாப் வசன உச்சரிப்பிலும் தெளிவு இல்லை. அதேபோல், மஞ்சுவாரியரை யூடியூப் சமையல் செய்பவராக ஒன்றிரண்டு சீனில் வருகிறார். கிளைமாக்சுக்கு முந்தைய ஒரே ஒரு சீனில் மட்டும் அவர் கை தட்டல் வாங்குகிறார். ரித்திகாசிங், கிஷார் போன்றவர்களையும் இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். கதிர் ஒளிப்பதிவு ஓகே.
டீச்சர் கேரக்டரில் வரும் துஷாரா விஜயன் ஒரு அழகான, அழுத்தமான நடிப்பை தந்து இருக்கிறார். படம் முடிந்தபி்ன்னரும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மனதில் நிற்கிறது. பகத்பாசிலுக்கு கொஞ்சம் காமெடி கலந்த, ரஜினிக்கு டெக்னிக்கலாக உதவும் கேரக்டர். அவர் நடிப்பில் குறையில்லை. பொதுவாக ரஜினி படங்களில் வில்லன் கேரக்டர் பவர்புல்லாக இருக்கும். இதில் ராணாவுக்கு அப்படி இல்லை. அதுவே படத்துக்கு பெரிய மைனஸ். அபிராமியும் ஏதோ வந்துபோகிறார். விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனாவாக மிரட்டிய டான்சர் வசந்தி, இதில் பாதிக்கப்பட்டபையனின் அம்மாவாக அடையாளம் தெரியாமல் வந்து போகிறார். அனிருத் பின்னணி இசையில் பெரியளவில் திருப்தி இல்லை. இப்படி நிறைய குறைகள்.
அதேசமயம், கல்வி குறித்து படம் பேசும் கருத்துகள், குறிப்பாக, கல்வியை சுற்றி நடக்கும் வியாபாரம், கார்ப்பரேட் தாக்கம், நுழைவு தேர்வுகளால் மாணவர்கள் பாதிக்கப்படும் விதம், ஏழை, அரசு பள்ளி மாணவர்களின் நிலை, அரசியல்வாதிகள் தலையீடு, ஊழல், அவர்கள் பெற்றோர்களின் மனநிலை, என்கவுன்டர்களுக்குபின்னால் இருக்கும் அரசியல் , மனிதஉரிமை என பல அழுத்தமான விஷயங்களை வேட்டையன் பேசுகிறது. இந்த கருவை ரஜினி போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து சொல்லும் போது அது மக்களிடம், அரசிடம் போய் சேர்கிறது. என்ன, என்கவுன்டர்தான் படத்தின் கரு. ராணாவை என்கவுன்டர் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறார் ஹீரோ. அந்த சண்டையில் பத்து, பதினைந்துபேர் சுடப்பட்டு சாகிறார்கள். அது மனித உரிமை மீறல் இல்லையா?அவர்களுக்கு குடும்பம் இல்லையா? நீதி இல்லையா? இப்படிப்பட்ட லாஜிக் மீறல்களை சரி செய்து இருக்கலாம்.
வேட்டையன் ஜெயிலர் மாதிரி மாஸ் படமல்ல, இந்தியன் 2 மாதிரி ஏமாற்றும் கதையும் அல்ல. ஜெய்பீம் மாதிரி ரொம்பவே மனசை பாதிக்கவில்லை. பெரிதாக ஏமாற்றவும் இல்லை. பல நல்ல கருத்துகளை, கேள்விகளை ஒரு மாஸ் ஹீரோ மூலமாக சொல்லும் நல்ல கதை என்பதால் ஒரு தடவை பார்க்கலாம்
**
What's Your Reaction?