ஐபிஎல் 2025: எப்படி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி? ஏலத்தில் நடந்தது என்ன?

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும் முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பதால், ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.

Nov 26, 2024 - 20:30
Nov 28, 2024 - 00:33
 0
ஐபிஎல் 2025: எப்படி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி? ஏலத்தில் நடந்தது என்ன?
ஐபிஎல் 2025 ஏலத்தில் பங்கேற்ற தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மற்றும் நிர்வாகிகள்

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஏராளமான இந்திய நட்சத்திர வீரர்கள் மீண்டும் மெகா ஏலத்திற்கு வந்துள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐபிஎல் நிர்வாகம் ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை தக்க வைக்கலாம் என்று கூறிய நிலையில், மொத்தமுள்ள 10 அணிகளும் தங்களுக்கான சிறந்த வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டனர். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.120 கோடி செலவழிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படிம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், ருதுராஜ் கெய்க்வாட் [ரூ.18 கோடி], ரவீந்திர ஜடேஜா [ரூ.18 கோடி], ஷிவம் துபே [ரூ.12 கோடி], மகேந்திரசிங் தோனி [ரூ.4 கோடி] ஆகிய இந்திய வீரர்களையும், வெளிநாட்டு வீரரான மதீஷா பத்திரனாவையும் [ரூ.13 கோடி] தக்கவைத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இருந்த ரூ.120 கோடியில், இதுவரை ரூ.65 கோடிக்கு வீரர்களை தக்கவைத்த நிலையில், தற்போது ரூ.55 கோடி மட்டுமே கைவசம் இருந்தது. இந்நிலையில், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை [24-11-24] அன்று ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கியது.

அதில், முக்கிய நட்சத்திர வீரர்களை எடுப்பதற்கு மற்ற அணிகள் போட்டிப்போட்டுக்கொண்டிருந்தது. ஏலம் தொடங்கிய வெகுநேரம் வரைக்கும் எந்த வீரரையும், சென்னை அணி ஏலத்தில் எடுக்கவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர், ஜாஸ் பட்லர், மிட்செல் ஸ்டார்க், ரிஷப் பண்ட், முஹமது சமி, டேவிட் மில்லர், யுவேந்திர சாஹல், முஹமது சிராஜ், கே.எல்.ராகுல், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, போன்ற நட்சத்திர வீரர்கள் எவரையும் சென்னை அணி ஏலத்தில் எடுக்கவில்லை.

பின்னர், இதற்காகத் தான் காத்திருந்தோம் என்பது போல டெவன் கான்வே பெயர் அறிவிக்கப்பட்டதும், அவரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி கடுமையாக போட்டி போட்டது. அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், முதல் வீரராக டெவன் கான்வே-யை ரூ.6.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. டெவன் கான்வே கடந்த 2022 மற்றும் 2023ஆம் ஆண்டு சீசன்களில் சென்னை அணிக்காக அதிரடி தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார்.

ராகுல் திரிபாதியை 3.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி. ராகுல் திரிபாதி, மகேந்திர சிங் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ரூ.1.50 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது.

தொடர்ந்து, ரவிச்சந்திரன் அஸ்வினை வாங்க, சென்னை அணி நிர்வாகம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. இறுதியாக, ரூ.9.75 கோடிக்கு அஸ்வினை வாங்கியது. ஏற்கனவே, சென்னை அணிக்காக விளையாடியுள்ள அஸ்வின் கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமதுவை ரூ.4.80 கோடி கொடுத்து சென்னை அணி வாங்கியது.

அதன் பின்னர், யாரும் எதிர்பாராத வகையில், ஆஃப்கானிஸ்தான் வீரர் நூர் அஹமதுவை சென்னை அணி 10 கோடி கொடுத்து வாங்கியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கடந்த சீசனில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக நூர் அஹமது விளையாடியுள்ளார். நேற்றைய ஏலத்தில், சென்னை அணி நூர் அஹமதுவுக்கு அதிக செலவளித்தது குறிப்பிடத்தக்கது.

அவர்களுக்கு பின்னர் தமிழக வீரர் விஜய் சங்கரை 1.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது சென்னை அணி. முதல் நாள் ஏலத்தில் குறிப்பிடத்தகுந்த சில வீரர்களை மட்டுமே சென்னை அணி வாங்கியது.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை [நவம்பர் 25] நடைபெற்ற 2ஆவது நாள் ஐபிஎல் ஏலத்தில், சென்னை அணி முதல் வீரராக சாம் கரனை 2.40 கோடிக்கு எடுத்தது. சாம் கரன் கடந்த 2023ஆம் ஆண்டு ஏலத்தில், பஞ்சாப் அணியால் 18.50 கோடிக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, சாம் கரன் சென்னை அணிக்காக விளையாடியுள்ளது முக்கியமான விஷயமாகும்.

அவரைத் தொடர்ந்து ஷேக் ரஷீத்தை [ரூ.30 லட்சம்] ஏலத்தில் எடுத்த சி.எஸ்.கே. அடுத்ததாக, அன்குல் கம்போஜை [ரூ.3.40 கோடி] அதிக விலை கொடுத்து வாங்கியது. அதேபோல் தீபக் ஹூடாவையும் ரூ.1.70 கோடி கொடுத்து வாங்கியது.

தொடர்ந்து முகேஷ் சௌத்ரி [ரூ.30 லட்சம்], குர்ஜப்நீத் சிங் [ரூ.2.20 கோடி], நாதன் எல்லிஸ் [ரூ.2. கோடி], ஜேமி ஓவர்டன் [ரூ.1.50 கோடி], கம்லேஷ் நாகர்கோட்டி [ரூ.30 லட்சம்], ராமகிருஷ்ணா கோஷ் [ரூ.30 லட்சம்], ஷ்ரேயாஸ் கோபால் [ரூ.30 லட்சம்], வன்ஷ் பேடி [ரூ.55 லட்சம்] ஆகியோரை ஏலத்தில் எடுத்தது. இறுதியாக தமிழக வீரர் ஆண்ட்ரே சித்தார்த்தை அடிப்படை விலையான ரூ.30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட டாப்-5 வீரர்கள்:

1. நூர் அஹமது - ரூ.10 கோடி
2. ரவிச்சந்திரன் அஸ்வின் - ரூ.9.75 கோடி
3. டெவன் கான்வே - ரூ.6.25 கோடி
4. சையது கலீல் அஹமது - ரூ.4.80 கோடி
5. ரச்சின் ரவீந்திரா - ரூ.4 கோடி

கடந்த சில ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக வீரர்கள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. தமிழகத்தை சேர்ந்த ஒரு அணி, அதுவும் சென்னை பெயரால் விளையாடிக்கொண்டு இருக்கும் அணியில், ஒரு வீரர்கூட தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்று பெரிய போராட்டமே நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎ.எஸ்.கே. அணி விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் கூட நடைபெற்றது.

இந்நிலையில், இந்த முறை 4 தமிழக வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியில் தமிழக வீரர்கள்:

1. ரவிச்சந்திரன் அஸ்வின்
2. விஜய் சங்கர்
3. குர்ஜப்நீத் சிங்
4. ஆண்ட்ரே சித்தார்த்

எப்போதும் அனுபவ வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை ஏறக்குறைய பெரிய இளம் பட்டாளத்தை களமிறக்கி உள்ளது. தோனிக்கு பிறகு, அணியை நீண்ட காலத்திற்கானதாக கட்டமைக்கப்பட வேண்டிய தேவை அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறது. முப்பது வயதிற்கு குறைவாக எட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை அணி.

சென்னை அணியில் எடுக்கப்பட்ட இளம் வீரர்கள்:

நூர் அஹமது - 19 வயது

ஷேக் ரஷித் - 20 வயது

மதீஷா பதிரனா - 21 வயது

அன்ஷுல் கம்போஜ் - 23 வயது

ரச்சின் ரவீந்திரா - 25 வயது

சாம் கரன் - 26 வயது

ருதுராஜ் கெய்க்வாட் - 27 வயது

முகேஷ் சௌத்ரி - 28 வயது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow