ஐபிஎஸ் அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட வீடு ரத்து.. தமிழக அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவு

சாகித்ய அகாடமி விருது பெற்று தமிழுக்கு தொண்டாற்றியதற்காக, கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை வேறு எவருக்கும் ஒதுக்கக் கூடாது என வீட்டு வசதி வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jan 25, 2025 - 15:07
 0
ஐபிஎஸ் அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட வீடு ரத்து.. தமிழக அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவு
கோப்பு படம்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளையொட்டி ஞானபீடம், சாகித்திய அகாடமி விருதுகள் பெற்று தமிழுக்கு தொண்டாற்றிய எழுத்தாளர்களை கெளரவிக்கும் வகையில் கடந்த 2022- ஆம் ஆண்டு கனவு இல்லம் எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த திட்டத்தின் கீழ், கல்மரம் என்ற நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு, சென்னை அண்ணா நகரில் ஆயிரத்து 409 சதுர அடி வீடு கடந்த 2022-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. 

இந்நிலையில் ஏற்கனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாக கூறி கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தமிழக அரசால் 2024-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்ய கோரியும், தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை வேறு எவருக்கும் ஒதுக்கக் கூடாது என உத்தரவிட கோரியும் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், ஏற்கனவே சொந்தமாக வீடு இருந்தாலும், கனவு இல்லம் திட்டத்தின் கீழ் எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு  பெற தகுதி உண்டு என 2022-ஆம் ஆண்டு அரசாணையில் குறிப்பிட்டுள்ள நிலையில் அதனை மாற்றி வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற தகுதி இல்லை என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீடு ஒதுக்கீடு  செய்யப்பட்டு பத்திரப்பதிவுக்காக காத்திருந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தனக்கு வீடு ஒதுக்கீடு செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்துள்ளதாக திலகவதி மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும் ஏற்கனவே வீடு சொந்தமாக வைத்திருக்கும்  சுந்தரமூர்த்தி, எஸ்.ராமகிருஷ்ணன், மா.ராஜேந்திரன் ஆகியோருக்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சவுந்தர், பிப்ரவரி 11-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும் வீட்டு வசதி வாரியத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அதுவரை ஏற்கனவே திலகவதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டை வேறு எவருக்கும் ஒதுக்கீடு செய்யக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow