Harry Brook : இவ்வளவு சின்ன வயசிலேயே இப்படி ஒரு சாதனை!.. இங்கிலாந்து கேப்டன் அபாரம்
Harry Brook New Record : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் அபார சாதனை படைத்துள்ளார்.

Harry Brook New Record : இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. செப்டம்பர் 19ஆம் தேதி நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து செப்டம்பர் 21ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக, அலெக்ஸ் கேரி 77* எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், ஸ்டீவன் ஸ்மித் 60 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஆரோன் ஹார்டீ 44 (26 பந்துகள்) ரன்களும், கேமரூன் கிரீன் 42 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி பில் சால்ட் டக் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 8 ரன்களில் வெளியேற இங்கிலாந்து அணி 11 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த வில் ஜாக்ஸ் மற்றும் ஹாரி புரூக் இணை ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சிதறடித்தது. 55 பந்துகளில் அரைசதம் கண்ட வில் ஜாக்ஸ் 84 ரன்கள் எடுத்து கேமரூன் கிரீன் பந்துவீச்சில் வெளியேறினார். இருவரும் இணைந்து 3ஆவது விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து ஜேமி ஸ்மித் 7 ரன்களில் வெளியேறினார்.
அபாரமாக ஆடிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் 87 பந்துகளில் சதம் விளாசி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் குறைந்த வயதில், ஒருநாள் போட்டிகளில் சதம் விளாசிய இங்கிலாந்து அணி கேப்டன் என்ற சாதனையை பதிவு செய்தார்.
ஹாரி புரூக் 25 வயது 215 நாட்களில் இந்த சாதனையை படைத்தார். முன்னதாக, கடந்த 2011ஆம் ஆண்டு அலஸ்டைர் குக் 26 வயது 190 நாட்களிலும், 2013ஆம் ஆண்டு இயன் மோர்கன் 26 வயது 358 நாட்களிலும் இந்த சாதனையை படைத்திருந்தனர். தற்போது இந்த சாதனையை ஹாரி புரூக் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து அணி 37.4 ஓவர்களில் 254 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறிக்கிட்டது. அப்போது இங்கிலாந்து அணி 74 பந்துகளில் 51 ரன்கள் தேவை என்றிருந்தது. இடைவிடாமல் மழை பெய்ததால், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, இங்கிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஹாரி புரூக் 94 பந்துகளில் 110 ரன்கள் எடுத்தும், லியம் லிவிங்ஸ்டன் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதன் மூலம் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கிய இருக்கிறது. இருந்தாலும், இன்னும் 2 போட்டிகள் மீதம் இருப்பதால் இங்கிலாந்து அணியும் கோப்பை வெல்வதற்கான வாய்ப்பை இந்த வெற்றியின் மூலம் தக்கவைத்துக்கொண்டு உள்ளது.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆஸ்திரேலியாவுக்கு முடிவுகட்டப்பட்டது. ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து 14 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






