Rishabh Pant : 'திரும்ப வந்துட்டான்னு சொல்லு' - ரிஷப் பண்ட் குறித்து ஆஸி. வீரர்களை எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங்
Former Australia Captain Rickey Ponting Warns on Rishabh Pant : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடித்ததை அடுத்து, முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Former Australia Captain Rickey Ponting Warns on Rishabh Pant : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற நவம்பர் மாதம் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஷஸ் தொடருக்குப் பிறகு அதிகம் எதிர்பார்க்கப்படும் தொடராக பார்டர் - கவாஸ்கர் தொடர் உள்ளது.
இந்த தொடரில், விபத்தால் காயமடைந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப உள்ளார். 26 வயதான ரிஷப் பண்ட் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2024 தொடரிலும், டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்று சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார். மேலும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த துலீப் டிராபி தொடரிலும், அவரது தலைமையிலான இந்தியா ‘பி’ அணி வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் ரிஷப் பண்ட் குறித்து கூறியுள்ள ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள ரிக்கி பாண்டிங், “அவர் எவ்வாறு விளையாடுவார் என்பதை நாம் எல்லோரும் பார்த்திருக்கிறோம். ஸ்டெம்பிக்கிற்கு பின்னால் நின்றுகொண்டு என்ன பேசுவார் என்பதையும் கேட்டிருக்கிறோம். அவர் எளிதில் எல்லாவற்றையும் தொற்றிக் கொள்வார்.
ரிஷப் பண்ட் ஒரு கிரிக்கெட் காதலர், வெற்றியாளர், அதுதான் அவர். ஏதோ, சில ரன்களை எடுப்பதற்காகவும், வேடிக்கையாக இருப்பதற்காகவும் விளையாடுவதில்லை. அவர், ஏற்கனவே, 4-5 சதங்களை விளாசியுள்ளார். 9 முறை 90 ரன்களுக்கு மேல் எடுத்து அவுட்டாகி உள்ளார். தோனி 120 இன்னிங்ஸில் விளையாடி நான்கைந்து சதங்களை அடித்துள்ளார். இதனை பார்க்கும் போதே தெரியும், ரிஷப் பண்ட் எத்தைகைய கிரிக்கெட் வெறியர் என்பது” என்று தெரிவித்துள்ளார்.
33 டெஸ்ட் போட்டிகளில் (56 இன்னிங்ஸ்) விளையாடியுள்ள ரிஷப் பண்ட், 2271 ரன்களை எடுத்துள்ளார். மேலும், 5 சதங்கள் மற்றும் 11 அரை சதங்களையும் குவித்துள்ளார். முன்னதாக 2020/21 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டியில், 97 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோலவே, பிரிஸ்பேனில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் போட்டியிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் குவித்து இந்திய அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தது முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனையும் குறிப்பிட்டு ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரிக்கி பாண்டிங் கூறுகையில், “உண்மையிலேயே அபாரமான மறுபிரவேசம் என்றுதான் குறிப்பிட வேண்டும். இப்போது நீங்கள் அவரது காலை பார்க்க முடிகிறதென்றால், கார் விபத்தில் எதிர்கொண்டது குறித்து, அவர் சொல்லும் கதைகளை கேட்க வேண்டும். மனரீதியாக மட்டுமல்லாமல், உடல் ரீதியாகவும் அவர் திரும்பி வந்திருக்கிறார்.
ரிஷப் பண்ட் கடந்த 2024 ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால், 12 மாதத்திற்கு முன்னால், ‘என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஐபிஎல் போட்டிக்கு களத்திற்கு உறுதியாக வந்து விடுவேன்’ என்றார். இவர் எப்படி பேட்டிங் செய்யப்போகிறார் என்று நாங்கள் நினைத்தோம்.
ஒருவேளை இம்பேக்ட் வீரராக விளையாட வைக்கலாம் என்றெல்லாம் யோசித்தோம். ஆனால், அவர் எல்லா போட்டியிலும் களமிறங்கி, டெல்லி அணியில் அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்ந்தார். டி20 உலக்கோப்பையில் 3ஆவது இடத்தில் பேட்டிங் செய்தார். மேலும், உலகக்கோப்பை வென்றபோது தனது பங்களிப்பை செய்திருந்தார். இப்போது, டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்து விட்டார்” என்று சிலாகித்து கூறியுள்ளார்.
What's Your Reaction?