நூதன முறையில் மோசடி.. கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் கும்பல் ஒன்று போலியாக அவரது புகைப்படத்தை பயன்படுத்தி முகநூல் பக்கம் துவங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் உலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜம்மாளின் மகன் செல்வத்தின் முகநூல் முகவரிக்கு போலி முகநூல் பக்கம் மூலமாக நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, தான் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் என அறிமுகமாகி, தனது நண்பர் ராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும், அவர் தமிழகத்திலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருவதால், வீட்டு உபயோக பொருட்களை சலுகை விலையில் வாங்கிக் கொள்ளுமாறு வலியுறுத்தி முகநூல் பக்கத்தில் உரையாடி நூதன மோசடியில் ஈடுபட்ட முயன்றுள்ளார்.
இதைக் கண்ட செல்வம் அதிர்ச்சியில் உறைந்து மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் இத்தகவலை தெரிவித்துள்ளார். ஆட்சியர் ஜெயசீலன் கவனத்திற்கு இத்தகவல் சென்றவுடன் அவர் முகநூல் நிர்வாகத்தில் புகார் அளித்த நிலையில் போலி முகநூல் பக்கம் உடனடியாக முடக்கப்பட்டது.
மேலும் இச்சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்கி மோசடியில் ஈடுபடும் என்ற சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில், சென்னை அபிராமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதேபோல, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி பதிவு செய்து வருவதாக, காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.
முக்கியமாக, சென்னை காவல் ஆணையர் அருண் பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்தி மோசடி முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர். வாட்ஸ்அப் டிபியில் காவல் ஆணையர் அருண் புகைப்படத்தை வைத்து ஏமாற்றுவதாக புகைப்படம் ஆதாரத்துடன் ஒருவர் புகார் அளித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவின் பெயரில், போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கியது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட போலியான முகநூல் கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கியது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பறிப்பதற்காக சர்வதேச மோசடி கும்பல்கள் கம்போடியா, மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் அடுக்குமாடி கட்டட வணிக வளாகங்களில் அலுவலகம் நடத்தி, மிகப்பெரிய சைபர் கிரைம் மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர்.
அதிலும் இந்தியாவில் உள்ளவர்களை ஏமாற்றுவதற்காக, வெளிநாட்டு வேலை, கை நிறைய சம்பளம் என ஆசை வார்த்தை காட்டி இந்திய இளைஞர்களை ஆட்கடத்தல் செய்து, சைபர் கிரைம் அடிமைகளாக நடத்தி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






