TrainAccident: சென்னை ரயில் விபத்து... தொடரும் மீட்பு பணிகள்... 18 ரயில்கள் ரத்து... முழு விவரம் இதோ!

கவரப்பேட்டை ரயில் விபத்து எதிரொலியாக, சென்னையில் இருந்து செல்லும் 14 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

Oct 12, 2024 - 16:27
Oct 12, 2024 - 16:33
 0
TrainAccident: சென்னை ரயில் விபத்து... தொடரும் மீட்பு பணிகள்... 18 ரயில்கள் ரத்து... முழு விவரம் இதோ!
கவரைப்பேட்டை விபத்து - 18 ரயில்கள் ரத்து

சென்னை: நேற்றிரவு கவரப்பேட்டையில் நடைபெற்ற ரயில் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து புறப்பட்ட பாக்மதி எஸ்பிரஸ் ரயில், சென்னை வழியாக பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில், லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி எக்ஸ்பிரஸ் மோதியது. இந்த விபத்தில் 13 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து அப்பகுதி மக்களும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில், எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்றாலும், 19 பேர் காயம் காரணமாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1300-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே விபத்து நிகழ்ந்த இடத்தில் அமைச்சர் ஆவடி நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. 

மெயின் லைனில் மட்டுமே வருவதற்கு சிக்னல் கொடுக்கப்பட்ட நிலையில், எக்ஸ்பிரஸ் ரயில் லூப் லைனில் வந்ததால் இந்த விபத்து நடந்துள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்த அவர், 15 மணி நேரத்தில் ரயில் போக்குவரத்து சீராகும் எனவும் கூறினார். இதனிடையே விபத்து நிகழ்ந்த இடத்தில் ரயில்வே ஊழியர்கள் 250 பேரும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் 100 பேரும் இணைந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் தர்பங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்நிலையில் விபத்து நிகழ்ந்த கவரப்பேட்டை பகுதியில் கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்துவதிலும், சேதமடைந்த தண்டவாளங்களை சரி செய்வதிலும் மீட்புப் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே கவரப்பேட்டையில் ரயில் விபத்து காரணமாக, 18 ரயில்கள் ரத்து  செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சீரமைப்பு பணிகள் முடிவடைய இன்னும் 12 மணி நேரம் ஆகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், அவ்வழியாக செல்லக் கூடிய 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருப்பதி – புதுச்சேரி (வண்டி எண் – 16111), சென்னை சென்ட்ரல் – திருப்பதி (வண்டி எண் – 16203), அரக்கோணம் – திருப்பதி (வண்டி எண் - 06754), விஜயவாடா - சென்னை சென்ட்ரல் (வண்டி எண் - 12711), சூலூர்பேட்டை - நெல்லூர் என இருமார்க்கங்களில் செல்லும் ரயில்களும் ரத்து செயப்பட்டுள்ளன. அதேபோல், அரக்கோணம் – புதுச்சேரி (வண்டி எண் - 16401), கடப்பா – அரக்கோணம் (16402) ஆகிய மார்க்கம் என மொத்தம் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதேபோல், மின்சார ரயில் சேவைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சூலூர்பேட்டையில் இருந்து சென்னை வரும் மின்சார ரயில்கள், கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில்களும் பொன்னேரி வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கவரப்பேட்டை ரயில் விபத்தை தொடர்ந்து, சென்னை சென்ட்ரலில் பயணிகள் வசதிக்காக HELP DESK அமைக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow