Rajinikanth Health Update : ரஜினிகாந்த் உடல்நிலையில் என்ன பிரச்சினை..? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!
Rajinikanth Health Update : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Rajinikanth Health Update : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில், கலந்துகொண்ட ரஜினிகாந்த், இருதினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார். இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். கூலி படத்திற்காக மழையில் நனைந்தவாறு ஒரு காட்சியில் நடித்ததாகவும், அதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
அதேபோல், ரஜினிகாந்துக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அதேநேரம் ரஜினிக்கு இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்களும் தீவிர பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் தேவைப்பட்டால் அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யவும் மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர். அடி வயிறு வீக்கம், முதுகுவலி உள்ளிட்ட பிரச்சினைகளும் ரஜினிக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், ரஜினியின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ரஜினிகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரத்த நாள வீக்கத்திற்காக அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல் ஸ்டன்ட் (Stent) பொருத்தப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என ரஜினி தரப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக ரஜினிகாந்திற்கு பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்ய வேண்டிய தேவை இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்(Superstar Rajinikanth) நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாக வேட்டையன் ட்ரெய்லர் ரிலீஸில் ஏதும் மாற்றம் இருக்குமா இல்லையா எனத் தெரியவில்லை. கோலிவுட் வட்டாரங்களின் தகவல்படி வேட்டையன் ட்ரெய்லர் ரிலீஸில் எந்த மாற்றமும் இருக்காது என சொல்லப்படுகிறது. ஆனால், கூலி படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே திட்டமிட்டபடி நடப்பதில் சிக்கல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ரஜினியின் உடல்நிலை முழுமையாக சரியான பின்னரே அவர் கூலி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கூலி ஷூட்டிங் முடிந்த பின்னர், ரஜினி அடுத்தடுத்து படங்களில் நடிப்பாரா இல்லையா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
What's Your Reaction?