பிஜேபி, மோடி என சொல்லி எவனும் ஓட்டு கேட்க முடியாது.. கொந்தளித்த அமைச்சர் துரைமுருகன்
திமுக சார்பிலான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் ‘BJP, மோடி என சொல்லி எவனும் ஓட்டு கேட்க முடியாது’ என்று மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு கொடுக்க வேண்டிய 4,034 கோடி நிதியை வழங்காமல் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று (மார்ச் 29) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த பதிவில், “காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை.
இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் ( MGNREGA) மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பா.ஜ.க. அரசு!
உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா?
தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! பாஜக அரசின் மனம் இரங்கட்டும்!” என்று குறிப்பிட்டிருந்தார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தில் 21 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, “இது யாருடைய அப்பன் பணமும் கிடையாது சர்கார் பணம். இதை நிறுத்த காரணம் இந்த திட்டத்தின் பெயர் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் என்பதுதான். அந்த பெயர் மோடி அரசுக்கு பிடிக்கவில்லை. காந்தியை சுட்டவர்கள் அவர்கள். காந்தியின் பெயரில் இத்திட்டம் இருப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் பணம் தர மறுக்கிறார்கள்.
இன்னும் ஒரு மாதத்தில் ஆயிரம் ரூபாய் கிடைக்காத தாய்மார்களுக்கு அப்பணம் கிடைக்கும். மோடி அரசே ஏழைகளை காப்பாற்று. மோடி பணத்தை கொடுக்காமல் ஏமாற்ற முடியாது. பிஜேபி, மோடி என சொல்லி எவனும் ஓட்டு கேட்க முடியாது. அந்த அளவுக்கு உங்களுக்கு துரோகம் செய்துள்ளார்கள். மோடி அல்ல அவன் பாட்டன் சொன்னாலும் உங்கள் பணத்தை வாங்கி தராமல் விடமாட்டோம்” என்று ஆவேசமாக பேசினார்.
What's Your Reaction?






