நயன்தாராவால் நெட்ஃபிளிக்ஸுக்கு வந்த சோதனை.. தனுஷ் போட்ட பலே பிளான்
நெட்ஃபிளிக்ஸ் மீது தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தொடர்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது, அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணமானது சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இத்திருமணத்தை ஒளிப்பரப்பு செய்யும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியிருந்ததால் திரைப்பிரபலங்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். பத்திரிகையாளர்கள் யாரும் திருமணத்தில் அனுமதிக்கப்படவில்லை.
இந்த ஆவணப்படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதையடுத்து, நீண்டகாலமாக உருவாகி வந்த ‘நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale) ஆவணப்படம் கடந்த 18-ஆம் தேதி நயன்தாராவின் பிறந்தநாளின் போது வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படமானது நயன்தாராவின் திருமணம் அல்லாது அவரது வாழ்க்கை பயணத்தையும் விவரிப்பதாக இருந்தது.
அந்த ஆவணப் படத்தில், 'நானும் ரௌடி தான்' படத்தின் பாடலையும், காட்சியையும் நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் தன்னிடம் அனுமதி கேட்காமல் பயன்படுத்தியதாக கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதனை நயன்தாராவே தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து, நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இச்சம்பவம் தொடர்பாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் நயன்தாராவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகை நயன்தாராவிற்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பான மனுவில், மும்பையைச் சேர்ந்த நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வொண்டர்பார் நிறுவனம் சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வொண்டர்பார் நிறுவனத்துக்கு அனுமதியளித்து வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
What's Your Reaction?