தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து - நடிகை கஸ்தூரி மீது அடுத்தடுத்து புகார்
சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் தெலுங்கு மக்கள் வாழ்ந்து வருகிறோம். நடிகை கஸ்தூரிக்கு எதிராக நவம்பர் 10ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் அல்லது மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

நடிகை கஸ்தூரி மீது மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 3க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கஸ்தூரிக்கு எதிராக நவ.10ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கு மக்களுக்கு எதிராக பேசியதாகவும், தெலுங்கு பெண்கள் குறித்து தவறாக பேசியதாகவும், நடிகை கஸ்தூரி மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கம், தமிழக நாயுடு சங்கம், ஆர்.எம்.ஆர் பாசறை உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனை சந்தித்து 3-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பினர் பேசுகையில், “நடிகை கஸ்தூரி தெலுங்கு பெண்கள் அந்தபுரத்தில் அடிமை வேலை செய்தது போல பேசியுள்ளார். கஸ்தூரியின் பேச்சால் உலகத்தில் உள்ள தெலுங்கு மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.தெலுங்கு மக்களின் பணிகளை இந்த உலகம் அறியும், தெலுங்கு மன்னர்கள் இல்லையெனில் தமிழகத்தில் ஆன்மீகம் இல்லை, தெலுங்கு மக்களை இழிவாக பேசியும், அதற்கு மன்னிப்பும் கேட்க முடியாது என கஸ்தூரி தெரிவித்து உள்ளார். கஸ்தூரியின் பேச்சால் தெலுங்கு மக்களுக்கும், பிற சமுதாய மக்களுக்கும் பகை ஏற்பட்ட வாய்ப்புள்ளது.
சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் தெலுங்கு மக்கள் வாழ்ந்து வருகிறோம். நடிகை கஸ்தூரிக்கு எதிராக நவம்பர் 10ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் அல்லது மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.மேலும் மதுரையில் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் அமைந்துள்ள மன்னர் திருமலை நாயக்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என தெரிவித்தனர். இதேபோல் நடிகை கஸ்தூரி மீது பல்வேறு இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது குறித்து நேற்று நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






