அன்பு, தைரியத்திற்கு உதாரணமாக திகழ்ந்தவர் இந்திரா காந்தி- ராகுல் நெகிழ்ச்சி
இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
மக்களவை எதிக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திரா காந்தியுடனான தனது குழந்தை பருவ புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, எனது பாட்டி இந்திரா காந்தி, அன்பு, தைரியம் இரண்டிற்கும் உதாரணமாக திகழ்ந்தவர். தேச நலன்களுக்கான பாதையில் அச்சமின்றி நடப்பதே உண்மையான பலம் என்பதை நான் அவரிடம் இருந்தே கற்றுக்கொண்டேன். அவருடைய நினைவுகள் எனது பலம். அவை எப்போதும் எனக்கு வழிகாட்டுகின்றன என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் வாழ்க்கையின் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்கள் புதிய உத்வேகம் பெறுவார்கள்.
இந்திரா காந்தி, வாழ்நாள் முழுவதும் போராட்டம், ஆற்றல்மிக்க தலைமை, தைரியம் ஆகியவற்றிற்கு உதாரணமாக இருந்தார். அவர் நாட்டிற்காக தன்னலமின்றி உழைத்தார். இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் காக்க தன்னுடைய உயிரையும் தியாகம் செய்தார். அவரது பிறந்த நாளுக்கு எங்களது பணிவான அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் ஒரே பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர் இந்திரா காந்தி. இவரது பதவிக்காலம் 1966 முதல் 1977 வரை நீடித்தது. பின்னர் 1980 முதல் 1984-யில் அவர் படுகொலை செய்யப்படும் வரை இரண்டு முறை பிரதமராக இந்திரா காந்தி நீடித்தார். தந்தை நேருவுக்கு பிறகு அவரது மகள் இந்திரா காந்தி இரண்டாவது பிரதமராக பணியாற்றினார்.
இந்திரா காந்தி தனது ஆட்சிக்காலத்தில் மாற்றத்தக்க பொருளாதாரம் மற்றும் சமூக சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். 1971-ஆம் ஆண்டு வங்கதேசம் உருவாக்கம் போன்ற முக்கிய தேசிய பாதுகாப்பு முடிவுகளிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். அமிர்தசரஸ் பொற்கோயிலில் சீக்கிய பிரிவினைவாதிகளை எதிகொள்வதற்கான ப்ளூ ஸ்டார் ராணுவ நடவடிக்கை அவரது இறப்பிற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.
What's Your Reaction?